2018-06-04 16:38:00

பிரிவினை ஏற்படுத்தும் கூறுகளை தூய ஆவியார் ஒன்றிணைப்பாராக


ஜூன்,04,2018. கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே, இன்னும் பிரிவினையை ஏற்படுத்தும் கூறுகளை தூய ஆவியார் ஒன்றிணைப்பாராக என்றும், தொடர்ந்து ஒன்றிப்பின் பாதையை நோக்கி நடப்போம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று, ஒரு கிறிஸ்தவ சபை பிரதிநிதிகளிடம் கூறினார்.

இத்திங்கள் காலையில் வத்திக்கானில் தன்னை சந்திக்க வந்த ஜெர்மன் இவாஞ்சலிக்கல் லூத்தரன் கிறிஸ்தவ சபை பிரதிநிதிகளை வரவேற்று உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவத்தில், மார்ட்டின் லூத்தர், சீர்திருத்தத்தை ஆரம்பித்ததன் 500ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2016ம் ஆண்டில், சுவீடன் நாட்டு Lund நகரில், கிறிஸ்தவ ஒன்றிப்பு நிகழ்வில் கலந்துகொண்டதை நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

அந்நிகழ்வு, கடந்தகாலக் காயங்களுக்காக, கருத்துவேறுபாடுகளையும், காழ்ப்புணர்வையும் தூண்டியிருக்கலாம், அதற்கு மாறாக, அந்நிகழ்வு, உடன்பிறப்பு ஒன்றிப்பு உணர்வில் நடைபெற்றது என்றுரைத்த திருத்தந்தை, உண்மையிலேயே, கடந்த ஐம்பது ஆண்டுகளில், கத்தோலிக்க மற்றும் லூத்தரன் கிறிஸ்தவ சபைக்கு இடையே ஒன்றிப்பு வளர்ந்துள்ளது என்று கூறினார்.

மனித யுக்திகளைவிட, நற்செய்தியின் ஒளியில் இடம்பெற்ற Lund நிகழ்வுக்கு, தூய ஆவியாருக்கு நன்றி தெரிவிப்பதாக உரைத்த திருத்தந்தை, கத்தோலிக்க மற்றும் லூத்தரன் சபைக்கு இடையே நிலவும் அதிகாரப்பூர்வ உரையாடல் வழியாக, இரு சபைகளும், பழைய முற்சார்பு எண்ணங்களை விலக்க இயலும் என்று கூறினார்.

வருங்காலத்தில் எல்லா பிரிவினைகளும் நீக்கப்பட்டு, சீர்திருத்தத்தின் பொதுவான நினைவு நிகழ்வு இடம்பெறும் மற்றும், கிறிஸ்தவ ஒன்றிப்பு, நம் தொடர் பாதையாக அமையும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதற்கு தூய ஆவியார் நமக்கு உதவுவார் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.