2018-06-04 16:30:00

திருத்தந்தை, போலந்து பிரதமர் Morawiecki சந்திப்பு


ஜூன்,04,2018. போலந்து குடியரசின் பிரதமர் Mateusz Morawiecki அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இத்திங்கள் காலையில் வத்திக்கானில் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் ஆகிய இருவரையும் சந்தித்தார், போலந்து பிரதமர் Morawiecki.   

திருப்பீடத்திற்கும், போலந்து நாட்டிற்கும் இடையேயும், போலந்து கத்தோலிக்கத் திருஅவைக்கும், அரசுக்கும் இடையேயும் நிலவும் நல்லுறவுகள், இருதரப்பும் அக்கறை காட்டுகின்ற குடும்பம் பற்றிய கொள்கை, நன்னெறி சார்ந்த விவகாரங்கள், இயற்கையை பாதுகாத்தல், 2018ம் ஆண்டு டிசம்பரில் போலந்தின் Katowiceவில் நடைபெறவிருக்கும் காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா. கருத்தரங்கு போன்ற பல்வேறு தலைப்புகள், இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று, திருப்பீட செய்தி தொடர்பகம் அறிவித்தது.

ஐரோப்பா மற்றும் உலகின் நிலைமை, குறிப்பாக, புலம்பெயர்ந்தோரை வரவேற்பதில் அவற்றின் நிலைப்பாடு, உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கிலிருந்து வருபவருக்கு ஆதரவான போலந்து அரசின் செயல்பாடுகள் ஆகியவையும், இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று, அத்தொடர்பகம் மேலும் அறிவித்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.