2018-06-04 16:50:00

திருநற்கருணை மட்டுமே நம் இதயங்களைத் திருப்திபடுத்தும்


ஜூன்,04,2018. வாழ்வின் உணவாகிய கிறிஸ்துவின் திருஉடல் மற்றும் திருஇரத்தம் மட்டுமே, அன்புகூரப்பட வேண்டும் என்ற நம் இதயங்களின் பசியை திருப்திபடுத்த இயலும் என்று, கிறிஸ்துவின் திருஉடல் மற்றும் திருஇரத்தம் பெருவிழா திருப்பலியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

உரோம் நகருக்கு தென்மேற்கே, ஏறத்தாழ முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கடற்கரை நகரமான ஓஸ்தியாவில், புனித மோனிக்கா பங்குத்தள ஆலய வளாகத்தில், இஞ்ஞாயிறு மாலையில், கிறிஸ்துவின் திருஉடல் மற்றும் திருஇரத்தம் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வில், உணவினால் மட்டுமல்லாமல், திட்டங்கள், பாசம், நம்பிக்கைகள், ஆசைகள் போன்றவற்றாலும் நாம் தொடர்ந்து ஊட்டம்பெற வேண்டியுள்ளது என்று கூறினார்.

அன்புக்காக ஏங்கும் நம் பசியை, மிகச் சிறந்த நன்கொடைகளும், மிக நவீன தொழில்நுட்பங்களும் ஒருபோதும் முழுமையாகத் திருப்திபடுத்த முடியாது என்று, இத்திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, திருநற்கருணை, அப்பம் போன்று சாதாரணமாகத் தெரிந்தாலும், அந்த உணவு மட்டுமே நம்மைத் திருப்திபடுத்தும், இந்த அன்பைவிட பெரிய அன்பு வேறு எதுவும் இல்லை என்று உரைத்தார்.

திருநற்கருணையில் நாம் இயேசுவைச் சந்திக்கிறோம், அவரின் வாழ்வைப் பகிர்ந்துகொள்கிறோம், அவரின் அன்பை உணர்கிறோம், இந்த வாழ்வின் உணவைத் தேர்ந்துகொள்வோம், திருப்பலிக்கு முன்னுரிமை கொடுப்போம், நம் குழுக்களில் திருநற்கருணை ஆராதனையை நடத்துவோம், கடவுள் நமக்காகத் தயார் செய்து வைத்துள்ளதைப் பெறுவதற்குத் தணியாத ஆவலுடன், கடவுளுக்காக பசியெடுக்கும் அருளைக் கேட்போம் என்றும் திருத்தந்தை கூறினார்.

திருநற்கருணையில், இயேசு நமக்காக ஓர் இடத்தையும், உணவையும் தயார் செய்து வைத்திருக்கிறார், அதேநேரம், இயேசு தம் சீடர்களையும், தயார் செய்யுமாறு கூறுகிறார் என்றுரைத்த திருத்தந்தை, புறக்கணிப்பு மற்றும் ஏமாற்றுச் சுவர்களைத் தகர்த்தெறியுமாறு கேட்டுக்கொண்டார். 

இத்திருப்பலிக்குப் பின்னர், ஏறக்குறைய ஒரு மைல் தூரத்திற்கு, திருநற்கருணை பவனியையும் தலைமையேற்று நடத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

1968ம் ஆண்டில், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், கிறிஸ்துவின் திருஉடல் மற்றும் திருஇரத்தம் பெருவிழா திருப்பலியை ஓஸ்தியாவில் நிறைவேற்றியதற்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2018ம் ஆண்டில் அங்கு நிறைவேற்றியுள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.