2018-06-04 15:28:00

இமயமாகும் இளமை – பெருங்கடலை சுத்தம் செய்யும் இளைஞர்!


பசிபிக் பெருங்கடலில் கலந்திருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வேண்டுமென்றால் ஏறத்தாழ 79,000 ஆண்டுகள் தேவைப்படுமாம். ஆனால் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் பசிபிக் பெருங்கடல் முழுவதும் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றப் போகிறேன் என அறிவித்து செயலில் இறங்கியிருக்கிறார், நெதர்லாந்தை சேர்ந்த இளைஞர், போயன் ஸ்லாட் (Boyan Slat). இவர், 2013ம் ஆண்டில் இந்த அறிவிப்பை வெளியிட்டபோது அவருக்கு வயது 19. ஸ்லாட் அவர்களின் இத்திட்டத்தை, 2015ம் ஆண்டின் சிறந்த 25 கண்டுபிடிப்புகள் வரிசையில் வைத்து கௌரவித்தது டைம் இதழ். ஐ. நா.வின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு, இளைஞர் ஸ்லாட் அவர்களை, 2014ம் ஆண்டின், ‘Champions of the Earth’ நாயகர்களில் ஒருவராகத் தேர்வு செய்தது. பெருங்கடல் சுத்தம் (Ocean Cleanup) என்ற திட்ட அமைப்பை நிறுவியவரும், அதன் தலைவருமான இளைஞர் ஸ்லாட் அவர்கள் சொல்கிறார்...

நான் 2011ம் ஆண்டில் கிரீஸ் நாட்டிற்குச் சென்றிருந்தேன். அப்போது அங்கிருக்கும் ஒரு கடலில் நீந்தும் போதுதான் ஒரு விடயத்தைக் கண்டுபிடித்தேன். நான் கடலுக்கடியில் பார்த்த மீன்களின் எண்ணிக்கையைவிட, பிளாஸ்டிக் குப்பைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. உடனே பலரிடம் இது குறித்து கேட்டேன். அனைவரும் பிளாஸ்டிக் நம்மை எதுவும் செய்யாது. அது அப்படியே கடலில்தான் இருக்கும் என்றார்கள். இப்படியே சேர்ந்துகொண்டே போனால் என்னாவது என்று அப்போதுதான் சிந்தித்தேன். என்னுடைய பள்ளியில் அறிவியல் பயிற்சி திட்டமாக, கடலில் பிளாஸ்டிக்கை சுத்தப்படுத்தும் திட்டத்தை கண்டுபிடித்து பார்வைக்கு வைத்தேன். அதற்கு முதல் பரிசு கிடைத்தது. பின்னர் டெல்ஃப்ட் (Delft) பல்கலைக்கழத்தில் வான்வெளி பொறியியல் படிப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது நிறைய பேராசியர்கள் வழியாக, கடலில் கலக்கும் பிளாஸ்டிக் பற்றிய அறிவியல் பூர்வமான தகவல்களை அறிந்துகொண்டேன். அதன்படி, 2020ம் ஆண்டில் கடலில் மொத்தம், 72 இலட்சத்து ஐம்பது ஆயிரம் டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் மிதக்கும். இவற்றின் எடை, பாரிசின் 1000 ஈபிள் கோபுரங்களுக்கு நிகரானது எனவும் அறிந்தேன். இவ்வளவு கழிவுகள் நமக்கு உணவளிக்கும் கடலில் மிதந்து கொண்டிருக்கின்றன என அறிந்ததும், சிறிது சிறிதாக என்னுடைய தொழில்நுட்பத்தை மேம்படுத்திக்கொண்டே வந்து, 2013ம் ஆண்டில் இதனை வெறும் சொல்லாக மட்டுமில்லாமல்,  செயலாக மாற்ற வேண்டுமென என்னுடைய கல்லூரிப் படிப்பை விட்டுவிட்டு, “பெருங்கடல் சுத்தம்” என்னும் அமைப்பை உருவாக்கினேன்”

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.