2018-06-02 14:25:00

புவியின் அமைதி, குடும்பத்தின் அமைதியிலிருந்து பிறக்கிறது


ஜூன்,02,2018. முன்னேற்றம், மனித உரிமைகளை ஊக்குவித்து பாதுகாத்தல், உலகளாவிய ஒப்பந்தங்களை அமல்படுத்துதல் ஆகிய மூன்று கூறுகளுடன், நல்ல பெற்றோராய்   இருப்பதும், உலக அமைதிக்கு மிகவும் முக்கியம் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. நிகழ்வு ஒன்றில் உரையாற்றினார்.

நல்ல பெற்றோராய் வாழ்வதால், பிள்ளைகள் மற்றும் சமுதாயத்தில் ஏற்படுத்தும் நல்தாக்கம் பற்றி, உலக பெற்றோர் தினம் சிறப்பிக்கப்பட்ட ஜூன் 01, இவ்வெள்ளியன்று, நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய, ஐ.நா.வில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும், பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், இவ்வாறு கூறினார்.

உலகில் அமைதியைக் கட்டியெழுப்புவதில் குடும்பம் முக்கிய இடத்தைக் கொண்டிருக்கின்றது என்றும், ஒருவர் ஒருவரை மதிக்கும் சூழலில் நல்ல தாயாகவும் தந்தையாகவும் இருப்பது, பிள்ளைகளை அமைதியான இதயங்களுடன் உருவாக்குவதற்கு இன்றியமையாதது என்றும், பேராயர் அவுசா அவர்கள், ஐ.நா. நிகழ்வில் வலியுறுத்தினார்.

உலக பெற்றோர் தினம், குடும்பப் பிணைப்புகளைக் காக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்றும், இப்புவியின் அமைதி, குடும்பத்தின் அமைதியிலிருந்து ஆரம்பிக்கின்றது என்றும் கூறிய பேராயர் அவுசா அவர்கள், பிள்ளைகள் மற்றும் சமுதாயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு, நல்ல தாயாக, நல்ல தந்தையாக இருப்பது முக்கியம் என்று கூறினார்.

வருங்கால உலகம், தற்போதைய குடும்பங்களின் அமைப்பைச் சார்ந்துள்ளது என்பதால், இக்காலத்து பெற்றோரும், வருங்காலப் பெற்றோரும், தங்களின் முக்கிய பங்கை செயல்படுத்துவதற்கு, நன்முறையில் ஊக்குவிக்கப்பட்டு, ஆதரவளிக்கப்பட்டு தயாரிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார், திருப்பீட அதிகாரி, பேராயர் அவுசா.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.