2018-06-01 15:35:00

திருத்தந்தை - கடும் கொடுமைகளுக்கு பின்புலத்தில் தீயவன்


ஜூன்,01,2018. இக்காலத்தில் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல், ஏனைய மனிதர்களும், கலாச்சார காலனித்துவம், போர், பசி, அடிமைத்தனம் ஆகியவற்றின் வழியாக கடும் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதைக் கண்டு வருகிறோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளிக்கிழமையன்று திருப்பலியில் கூறினார்.

வத்திக்கானில், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வெள்ளி காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய திருப்பலியில் வாசிக்கப்பட்ட, புனித பேதுருவின் முதல் திருமடல் (1பேது.4,7-13) பகுதியை மையப்படுத்தி மறையுரையாற்றினார்.

கிறிஸ்தவர்களுக்கு எதிரான கொடுமைகள், நூற்றாண்டுகளாக எவ்வாறு கொளுந்துவிட்டு எரிந்தன என்பது பற்றிக் கூறும் இந்தப் பகுதி பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடும் சித்ரவதைகளும், கொடுமைகளும் கிறிஸ்தவ வாழ்வின் ஓர் அங்கமாக உள்ளன என்று கூறினார்.

இயேசு, இறைத்தந்தைக்கு விசுவாசமாக இருந்தார் என்பதால், அவர் கடும் சித்ரவதைகளுக்கு உள்ளானார் என்றும், இக்காலத்திலும், ஏராளமான கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் மீதுள்ள அன்பால் கொல்லப்படுகின்றனர் மற்றும் துன்புறுத்தப்படுகின்றனர் என்றும், பல நாடுகளில் கிறிஸ்தவர்களுக்கு உரிமைகள் கிடையாது, ஒருவர் சிலுவையைத் தூக்கிச் சென்றால்கூட சிறையில் அடைக்கப்படுகிறார் என்றும் கவலையுடன் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், மனிதர், வாழும் கடவுளின் சாயலாக உள்ளார்கள் என்பதால், அவர்கள் கடும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் வேறொரு வகையான கொடுமைகளும், இக்காலத்தில் இடம்பெறுகின்றன என்றுரைத்த திருத்தந்தை, கிறிஸ்தவர்களும், ஏனைய மனிதர்களும் சித்ரவதைக்கு உள்ளாவதற்குப் பின்புலத்தில் சாத்தான் உள்ளது என்றும் மறையுரையில் கூறினார்.    

இன்னும், இன்று உலகில் போதுமான உணவு இருக்கின்றபோதிலும், அநீதியான பசிக்கொடுமை, மனிதரை அழிக்கின்றது என்று கூறியத் திருத்தந்தை, பல்வேறு அடிமைமுறைகளில் மனிதர் பயன்படுத்தப்படுவது பற்றியும் விளக்கினார்.

உலகளாவிய மனித உரிமைகள் அறிக்கை வெளியிடப்பட்டு எழுபது ஆண்டுகள் ஆகியும், புலம்பெயர்ந்தவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு, சித்ரவதைகளுக்கு உள்ளாவதையும், அடிமைகளாக அழிக்கப்படுவதையும், காணொளி ஒன்றில் பார்த்ததைக் குறிப்பிட்ட திருத்தந்தை, மனித மாண்பு அழிக்கப்படுவதை சாத்தான் விரும்புகின்றது என்றும் கூறினார்.

போர்கள், கடவுளின் சாயலாகவுள்ள மனிதரை அழிக்கும் கருவிகளாக இருக்கின்றன என்றும், மனித சமுதாயத்தை அழிக்கும் ஆயுதங்களாக பல தொழிற்சாலைகளை நடத்தும் மனிதரும் உள்ளனர் என்றும் மறையுரையில் கூறியத் திருத்தந்தை, இன்றைய உலகில், கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல், ஏனைய மனிதர்களும் கடும் துன்பங்களுக்கு  உள்ளாகின்றனர் என்று தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.