2018-06-01 16:20:00

கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கையில் திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூன்,01,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கையை ஊக்குவித்து முன்னெடுத்துச் செல்கிறார் என்று, WCC எனப்படும் உலக கிறிஸ்தவ மன்றத்தின் போதகர் Martin Robra அவர்கள் தெரிவித்தார்.

WCC கிறிஸ்தவ சபைகள் மன்றம் உருவாக்கப்பட்டதன் எழுபதாம் ஆண்டு நிறைவையொட்டி, இம்மாதம் 21ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜெனீவா செல்லவிருப்பதையொட்டி, போதகர் Martin Robra அவர்கள், La Civilta Cattolica இதழின் தலைமை ஆசிரியர், இயேசு சபை அருள்பணி Antonio Spadaro அவர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

கிறிஸ்தவ சபைகள் மத்தியில் இறையியல் உரையாடல்களையும் கடந்து, அர்த்தமுள்ள ஒத்துழைப்புக்கு, மேலும் அதிக விருப்பமும், காலமும் தேவைப்படுகின்றன எனவும் கூறினார், போதகர் Martin Robra. 

 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 21ம் தேதி மேற்கொள்ளும் ஜெனீவா பயணத்தின்போது, WCC கிறிஸ்தவ சபைகள் மன்றம் பற்றி கவனம் செலுத்துவார் எனவும், இது, முந்தைய திருத்தந்தையர் அருளாளர் 6ம் பவுல் மற்றும் புனித 2ம் ஜான் பால் அவர்களிலிருந்து சற்று மாறுபட்டு உள்ளது எனவும் கூறினார், போதகர் Martin Robra.

போதகர் Martin Robra அவர்கள், 1965ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட, கத்தோலிக்கத் திருஅவை மற்றும் WCC கிறிஸ்தவ சபைகள் மன்ற உரையாடல் குழுவின் இணைச் செயலராவார்.

1948ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட, WCC எனப்படும் உலக கிறிஸ்தவ சபைகள் மன்றத்தில், 110 நாடுகளிலிருந்து 348 கிறிஸ்தவ சபைகள் உறுப்பினர்களாக உள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.