2018-05-31 15:44:00

உலகில் நெருக்கடிநிலையில் 120 கோடிச் சிறார்


மே,31,2018. உலகிலுள்ள சிறாரில் பாதிக்கு மேற்பட்டோர், வறுமை, மோதல்கள் மற்றும் பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர் என்று, Save the Children என்ற சிறார் நலஅமைப்பு கூறியுள்ளது.

ஜூன் 01, இவ்வெள்ளியன்று உலகச் சிறார் நாள் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, குழந்தைப்பருவம் குறித்து, இப்புதனன்று அறிக்கை வெளியிட்டுள்ள Save the Children அமைப்பு, உலகில் 120 கோடிச் சிறார் அச்சுறுத்தல்களையும், 15 கோடியே 30 இலட்சம் சிறார், வறுமை, மோதல்கள் மற்றும் பாகுபாடுகளையும், எதிர்கொள்கின்றனர் என்று கூறியுள்ளது.

உலகளவில் குழந்தைகளின் நிலையைப் பார்க்கும்போது, கடந்த ஆண்டைவிட இவ்வாண்டில் முன்னேற்றம் தெரிகின்றது எனவும், நூறு கோடிச் சிறார், கடும் ஏழ்மை மிகுந்த நாடுகளிலும், ஏறத்தாழ 24 கோடிச் சிறார், போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளிலும், 57 கோடியே 50 இலட்சம் சிறுமிகள், பெண்களுக்கு எதிராக பாகுபாடுகள் இடம்பெறும் நாடுகளிலும் வாழ்கின்றனர் என்று, அவ்வறிக்கை கூறுகிறது.    

சிறாரின் நிலைமை குறித்து 175 நாடுகளில் ஆய்வை நடத்தியபோது, 95 நாடுகளில் சிறாரின் நிலைமையில் முன்னேற்றம் தெரிந்தது என்றும், நாற்பது நாடுகளில்  நிலைமை மிக மோசமாக இருந்தது என்றும் அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.

சிறார் நல்ல நிலையில் உள்ள நாடுகளில் சிங்கப்பூர் மற்றும் சுலோவேனியா முதலிடத்திலும், அந்நாடுகளையடுத்து, நார்வே, சுவீடன் என நாடுகள் உள்ளன எனவும் தெரியவந்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.