2018-05-30 17:28:00

போதிய உணவின்மையே 50% குழந்தைகள் இறப்புக்கு காரணம்


மே,30,2018. உலகில் 81 கோடியே 50 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள், போதிய உணவு கிடைக்காமல் வாடுகின்றனர் எனவும், போதிய உணவு கிடைக்காததே, உலகில் ஐம்பது விழுக்காட்டு குழந்தைகளின் இறப்புக்கு காரணம் எனவும் ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மே 28, இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக பசி தினத்தையொட்டி வெளியான இந்த ஆய்வில், உலகில் உணவு கிடைக்காமல் பசியுடன் இருப்பவர்களில் 60 விழுக்காட்டினர் பெண்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.  

எய்ட்ஸ், மலேரியா, காசநோய் உள்ளிட்ட நோய்களால் இறப்பவர்களைவிட பசியால் இறப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்றும்,  பசியால் வாடும் மக்கள் வாழ்கின்ற 119 நாடுகள் பட்டியலில் இந்தியா நூறாவது இடத்தில் இருக்கின்றது என்றும் கூறப்படுகிறது

இந்த பட்டியலில் இரஷ்யா 22வது இடத்திலும், சவுதி அரேபியா 27வது இடத்திலும், சீனா 29வது இடத்திலும், இலங்கை மற்றும் நைஜீரியா 84வது இடத்திலும் உள்ளன எனவும் கூறப்படுகிறது.

ஒரு மனிதர் நலமாக வாழ்வதற்கு நாள்தோறும் அவரது உணவின் வாயிலாக 2,100 கலோரி கிடைக்க வேண்டும் என்று ஐ.நா. வரையறுத்திருக்கிறது. உலகின் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களில் 98 விழுக்காட்டினர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

உலக பசி தினம் 2011ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

ஆதாரம் : Agencies/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.