2018-05-29 11:48:00

விவிலியத்தேடல் : புதுமைகள் – அப்பம் பகிர்ந்தளித்த புதுமை - 2


இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, “இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?” என்று பிலிப்பிடம் கேட்டார்... பிலிப்பு மறுமொழியாக, “இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே” என்றார். (யோவான் 6:5,7)

 

யோவான் நற்செய்தியின் 6ம் பிரிவில், இயேசு 5000 பேருக்கு அப்பத்தைப் பகிர்ந்தளித்த புதுமையின் அறிமுக வரிகள் இவை. மக்கள் கூட்டத்தைக் கண்ட இயேசு பிலிப்பிடம் கேட்ட கேள்வியை மேலோட்டமாகப் பார்த்தால், வேடிக்கையாகத் தெரிகிறது. தன்னை நோக்கி வந்த 'பெருந்திரளான மக்களுக்குத்' தேவையான உணவை 'எங்கிருந்து வாங்குவது' என்று இயேசுவின் கேள்வி அமைந்திருந்தது. உணவு வாங்க தங்களிடம் தேவையான பணம் உள்ளதா என்பதை இயேசு சிந்தித்ததுபோல் தெரியவில்லை. எனவே, பிலிப்பு அவரிடம் அதை தெளிவாகக் கூறுகிறார். தங்கள் கைவசம் இருப்பது 200 தெனாரியம் என்பதையும், அவற்றைக்கொண்டு 'அப்பம் வாங்கினாலும், ஆளுக்கு ஒரு சிறு தூண்டும் கிடைக்காதே' என்பதையும் கூறுகிறார். இவர்களுக்கு உணவளிப்பது முற்றிலும் இயலாத செயல் என்பதை, பிலிப்பு இயேசுவுக்கு தெளிவாக உணர்த்த விரும்புகிறார்.

அந்நேரத்தில், பேதுருவின் சகோதரர், அந்திரேயா, மற்றோர் ஆலோசனையுடன் இயேசுவை அணுகி வருகிறார். "இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும், இரண்டு மீன்களும் உள்ளன" என்று கூறுகிறார். உடனே, அதே மூச்சில், அவர் "ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?" என்றும் கூறுகிறார் (யோவான் 6:9). பிலிப்பின் சொற்கள் 'முற்றிலும் இயலாது' என்ற பாணியில் ஒலித்தபோது, அந்திரேயாவின் சொற்கள் 'ஏதாவது செய்ய இயலுமா?' என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. இயலாது என்ற நிலையிலிருந்து, இயலுமா என்ற கேள்வி நிலைக்கு சீடர்கள் வந்ததும், இயேசு தன் புதுமையைத் துவக்குகிறார். "மக்களை அமரச் செய்யுங்கள்" (யோவான் 6:10) என்று அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார்.

இயேசு இவ்வாறு கூறியதும், நற்செய்தியாளர் யோவான் "அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது" (யோவான் 6:10) என்று பதிவுசெய்துள்ள சொற்கள், ஒரு சில எண்ணங்களை விதைக்கின்றன. இயேசுவைத் தேடி வந்த கூட்டத்தையும், அவர்களுக்கு உணவளிக்க தங்களிடம் போதிய பணம் இல்லை என்பதையும் கண்டு மலைத்துப் போயிருந்த சீடர்களின் பார்வை குறுகியதாக, கவலையால் சுருங்கிப்போனதாக இருந்தது. ஆனால், "மக்களை அமரச் செய்யுங்கள்" என்று இயேசு தந்த கட்டளையைக் கேட்டதும், ஏதோ ஒன்று நிகழப்போகிறது என்ற எதிர்பார்ப்பு, அவர்கள் மனதில் உருவாகியிருக்கவேண்டும். அந்த எதிர்பார்ப்பு, சீடர்களின் பார்வையை விரிவாக்கியது. விரிவாக்கப்பட்ட பார்வையில், அப்பகுதி, அழகான புல்தரையாக விரிந்தது. உள்ளத்தில் நம்பிக்கை பிறந்துவிட்டால், நமது கண்ணோட்டம் மாறும் என்பதற்கு, நற்செய்தியாளர் குறிப்பிட்டுள்ள 'புல்தரை' ஓர் எடுத்துக்காட்டு.

ஒன்றுமில்லை, ஒன்றும் இயலாது என்ற நிலையில் நாம் இருக்கும்போது, நம்பிக்கை தோன்றினால், நல்லவை தொடரும். டி.எல்.மூடி (D.L.Moody) என்பவர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு, நம்பிக்கை இருந்தால், நம்மைத் தேடி புதுமைகள் வரும் என்பதைக் கூறுகிறது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த எவஞ்சலிக்கல் சபை போதகர், டி.எல்.மூடி  அவர்கள், அனாதை இல்லம் ஒன்றை நடத்திவந்தார். அவர் மிகுந்த கடவுள் நம்பிக்கைக் கொண்டவர். அவர் நடத்திவந்த இல்லத்தில், ஒரு நாள், குழந்தைகள் சாப்பிட இரவுணவு ஒன்றும் இல்லை. குளிர் காலம். பனி பெய்து கொண்டிருந்தது. மூடி அவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றார். மனதில் ஏதோ தோன்றவே, தன் அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டு, முழந்தாள் படியிட்டு செபிக்கத் துவங்கினார். ஐந்து நிமிடங்கள் ஆயிற்று. யாரோ ஒருவர், அனாதை இல்லத்தின் நுழைவாயில் மணியை அடித்தார். மூடி அவர்கள் கதவைத் திறந்தபோது, முன் பின் தெரியாத ஒரு நபர் கதவருகே நின்று கொண்டிருந்தார். அவருக்குப் பின் ஒரு வேன் நின்று கொண்டிருந்தது.

அவர் ஒரு ரொட்டிக் கடையின் முதலாளி. பக்கத்து ஊருக்கு ரொட்டி கொடுப்பதற்குச் சென்று கொண்டிருந்தார். அனாதை இல்லத்தின் முன் அவரது வேன் நின்றுவிட்டது. என்ன முயன்றும் அவரால் வேனை மீண்டும் ஓட்டிச்செல்ல முடியவில்லை. பனி வேறு அதிகமாகி விட்டது. எனவே, கடை முதலாளி, வேனில் கொண்டுவந்த ரொட்டிகள் அனைத்தையும், அந்த அனாதை இல்லத்திற்கு வழங்கினார்.

சிறிதும் உணவு இல்லை என்ற நிலையில் டி.எல்.மூடி அவர்களின் அனாதைக் குழந்தைகளுக்கு ரொட்டிக்கடை உரிமையாளர் வழியே கிடைத்த உணவு, இஸ்ரயேல் மக்களுக்கு வானத்திலிருந்து பொழிந்த மன்னாவைப் போல அமைந்தது.

பழைய ஏற்பாட்டின் இன்னும் சில இடங்களில், சிறிதளவு உணவு, பலருக்கு உணவாகப் பரிமாறப்பட்டதைக் காண்கிறோம். இந்நிகழ்வுகளில் ஒன்று, அரசர்கள் 2ம் நூலில் இவ்வாறு பதிவாகியுள்ளது:

அரசர்கள் - இரண்டாம் நூல் 4: 42-44

பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப் பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரிடம் கொண்டு வந்தார். எலிசா, "மக்களுக்கு உண்ணக் கொடு" என்றார். அவருடைய பணியாளன், "இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?" என்றான். அவரோ, "இவற்றை இம்மக்களுக்கு உண்ணக் கொடு. ஏனெனில் 'உண்ட பின்னும் மீதி இருக்கும்' என்று ஆண்டவர் கூறுகிறார்" என்றார். அவ்வாறே அவன் அவர்களுக்குப் பரிமாற, அவர்கள் உண்டனர். ஆண்டவரது வாக்கின்படி மீதியும் இருந்தது.

மக்களின் பசியைப் போக்க, தங்களிடம் இருக்கும் உணவு போதுமா என்ற கேள்வி அரசர்கள் இரண்டாம் நூலில் எழுப்பப்படுகிறது. அதையொத்த ஒரு சந்தேகத்தை இயேசுவின் சீடர் அந்திரேயாவும் எழுப்புகிறார். இருந்தாலும், இறைவனை நம்பி உணவு பரிமாற்றம் ஆரம்பமாகிறது. இறுதியில், மக்கள் வயிறார உண்ட பின்னர், மீதம் உணவும் இருக்கிறது.

இவ்விரு நிகழ்வுகளையும் மேலோட்டமாகச் சிந்திக்கும்போது, ஓர் எண்ணம் தோன்ற வாய்ப்புண்டு. அதாவது, உலகின் பசியைப் போக்க, இல்லாதவர்களின் குறையைப் போக்க இறைவன் நேரில் வந்து ஏதாவது புதுமைகள் செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுவதற்கு வாய்ப்புண்டு. ஆயினும், இந்த இரு வாசகங்களையும் இன்னும் ஆழமாக ஆராய்ந்தால், ஓர் உண்மை தெளிவாகும். இறைவன், இந்த உணவை, வானிலிருந்து விழுந்த மன்னாவைப்போல், ஒன்றுமில்லாமையிலிருந்து உருவாக்கவில்லை. கூட்டத்தில் ஒருவர் கொண்டுவந்து கொடுத்த உணவே, இவ்விரு புதுமைகளின் அடித்தளமாக அமைந்ததைப் பார்க்கலாம்.

தன்னைத் தேடிவந்த மக்களைக் கண்டதும், அவர்களுக்கு விருந்து பரிமாறச் சொல்கிறார் இயேசு. இயேசுவின் அந்த ஆர்வத்திற்கு எதிராக, கேள்விகள் எழுகின்றன, ஒரு சிறுவனிடம் உணவு உள்ளதென்று சொல்லப்படுகிறது. அந்தச் சிறுவன் தந்த உணவு அங்கு நிகழ்ந்த அற்புதத்தைத் துவக்கிவைத்தது. சிறுவன் தந்த ஐந்து அப்பம், இரண்டு மீன், இயேசுவின் ஆசீர்... ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் வயிறார உண்டனர்... மீதியும் இருந்தது.

இந்தப் புதுமையை இருவேறு கண்ணோட்டங்களில் சிந்திக்கலாம். இயேசு தனி ஒருவராய் உணவைப் பலுகச்செய்தார் என்று சிந்திப்பது ஒரு கண்ணோட்டம். மற்றொரு கண்ணோட்டம், சில விவிலிய ஆய்வாளர்களின் கருத்தாக நம்மை அடைந்துள்ளது. இந்தக் கண்ணோட்டத்தில் சிந்திக்க நமக்கு உதவியாக இருப்பது, யோவான் நற்செய்தியில் மட்டும் கூறப்பட்டுள்ள சிறுவன்.

ஐந்து அப்பங்களும், இரண்டும் மீன்களும் அங்கிருந்தன என்பதை நான்கு நற்செய்திகளும் கூறினாலும், யோவான் நற்செய்தியில் மட்டும், அந்த உணவு, ஒரு சிறுவனிடம் இருந்தது என்று குறிப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. சிறுவன் எதற்காக உணவுகொண்டு வந்திருந்தான்?  அச்சிறுவன், அதை ஏன் இயேசுவிடம் கொணர்ந்தான்? என்ற கேள்விகள், இப்புதுமையின் இரண்டாவது கண்ணோட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. இக்கண்ணோட்டத்தை நாம் அடுத்தத் தேடலி்ல் ஆழமாய் சிந்திப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.