2018-05-29 16:10:00

பங்களாதேஷில் மதங்களிடையே நல்லிணக்கம்


மே,29,2018. பங்களாதேஷ் நாட்டில் கத்தோலிக்கர் சிறிய அளவில் இருந்தாலும், அவர்கள் நாட்டின் பொதுநலனில் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர் என, அந்நாட்டின் முதல் கர்தினால் பாட்ரிக் டிரொசாரியோ அவர்கள் தெரிவித்தார்.

அத் லிமினா சந்திப்பையொட்டி தற்போது உரோம் நகரிலுள்ள, டாக்கா பேராயர் கர்தினால் டிரொசாரியோ அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பங்களாதேஷ் திருத்தூதுப்பயணம், அந்நாட்டின் கலாச்சாரத்தை உறுதி செய்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது என்று கூறினார்.

பங்களாதேஷ் மக்கள் மற்றும் மதங்களுக்கு இடையே, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அந்நாட்டு கலாச்சாரம் முக்கிய இடம் வகிப்பதை ஏற்கனவே உணர முடிகின்றது என்றும், திருத்தந்தையின் பங்களாதேஷ் திருத்தூதுப்பயணம், கிறிஸ்தவர்களின் பணிக்கு புதிய உந்துதல் அளித்துள்ளது என்றும் கர்தினால் தெரிவித்தார்.

பங்களாதேஷில், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும், இந்துக்களும் ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடத்தி சேர்ந்து செபிக்கின்றனர் என்றும், நாட்டில், மதங்களிடையே நல்லிணக்கம் நிலவுகிறது என்றும் கூறினார், கர்தினால் பாட்ரிக் டிரொசாரியோ.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2017ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை, பங்களாதேஷில் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டார். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.