2018-05-29 11:14:00

இமயமாகும் இளமை - இளமையின் பல முகங்கள்


தமிழ் முரசு வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்ட கவிதை, ஒரு சில மாற்றங்களுடன்...

வாய் சொல்லின் வீரர்கள் மத்தியில், செயல் வீரனாய் வாழத் தூண்டுவது இளமை!

முதியவர்கள் பேச்சு வார்த்தை நடத்தும்போது, நாட்டுக்காக யுத்தக் களத்தில் போராடச் செல்வது இளமை!

சனி தோஷம், செவ்வாய் தோஷம்... தூக்கி குப்பைத் தொட்டியில் போடவைக்கும் இளமை!

அல்லாவையும், இராமனையும் அழைத்து, அயோத்தியில் அமைதி கொணரத் துடிப்பது இளமை!

உழைப்பை உதவியாகவும், முயற்சியை நண்பனாகவும், தன்னம்பிக்கையை ஊன்று கோலாகவும்... வாழ்க்கை பாடத்தை சொல்வது இளமை!!

இளமை –

இமயத்தின் உச்சியைத் தொட்டுவிடத் துடிக்கும்

இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும் பாலம் கட்ட திட்டம் போடும்!

இளமை –

விரக்தியை விருந்தாளியாய் ஏற்றுக்கொள்ளாது

வறுமையைக் கண்டு வருத்தம் கொள்ளாது...

சோம்பலைத் தீண்ட சம்மதிக்காது!

ஃபிடெல் காஸ்ட்ரோவின் இளமைக் கனவு, கியூபாவின் புரட்சி விடுதலை!

காந்தியின் இளமைக் கனவு, இந்தியாவின் அகிம்சை விடுதலை!

நெல்சன் மண்டேலாவின் இளமைக் கனவு, கறுப்பு இனத்திற்கான விடுதலை!

பெரியாரின் இளமைக் கனவு, மூடநம்பிக்கையில் இருந்து விடுதலை!

புயலின் நடுவில் மீனவனின் புன்னகை

விஷப் பாம்புகளின் நடுவில் இருளர்களின் புன்னகை

வெடிகுண்டு நிலத்தில் இராணுவ வீரனின் புன்னகை

மிருகங்கள் நடமாடும் காட்டில் ஆதிவாசி புன்னகை

எல்லாம் சாத்தியமாகிறது,

இளமை, வாழ்க்கையோடு பயணம் செய்வதால்!

ஆதாரம் : தமிழ் முரசு வலைத்தளம் / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.