2018-05-29 16:04:00

ரொஹிங்ய உண்மை நிலவரத்தை அறிய பல்சமய குழு


மே,29,2018. மியான்மாரில், மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள இரக்கைன் மாநிலத்தில், ரொஹிங்ய இனத்தவரின் பிரச்சனைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கென, அந்நாட்டு கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் தலைமையில், பல்சமயத் தலைவர்கள் குழு ஒன்று அப்பகுதியை பார்வையிட்டுள்ளது.

அமைதிக்காக மதங்கள் என்ற பன்னாட்டு அமைப்பின் ஆறு உறுப்பினர்கள், மே 27, இஞ்ஞாயிறன்று, இரக்கைன் மாநிலத்தின் Maungdaw நகருக்குச் சென்று, அம்மாநிலத்தின் ரொஹிங்யா முஸ்லிம்கள், இந்துக்கள் மற்றும் Mro சமூகங்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளை நேரடியாகக் கேட்டறிந்தனர்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆரம்பித்த, ரொஹிங்ய புரட்சியாளர்களுக்கு எதிரான மியான்மார் இராணுவத் தாக்குதல்களில் அழிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ரொஹிங்யா கிராமங்களையும் இக்குழு பார்வையிட்டுள்ளது. இத்தாக்குதல்களையடுத்து, ஆறு இலட்சத்து எழுபதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள், பங்களாதேஷ் நாட்டில் தஞ்சம் தேடியுள்ளனர்.

கர்தினால் போ அவர்களுடன், Ratana Metta அமைப்பைச் சேர்ந்த, புத்தமதத்தின் ஒரு முக்கியமான பொதுநிலையினர், மியான்மார் இஸ்லாமிய மையத்தின் முக்கியத் தலைவரான, ஒரு முஸ்லிம் பொதுநிலையினர் உட்பட ஆறு பேர் இரக்கைன் பகுதியைப் பார்வையிட்டனர். 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.