2018-05-29 15:47:00

உலகப்போக்கு சிந்தனைகள், நடவடிக்கைகளைத் தவிர்ப்போம்


மே,29,2018. துன்ப நேரங்களில் உலகின் போக்குக்குத் திரும்பிவிடாமல், புனிதத்துவம் நோக்கிய பாதையில் நிலைத்திருப்போம் என, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இச்செவ்வாய் காலையில் நிறைவேற்றிய திருப்பலியில் விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனிதத்துவம் நோக்கிய பாதையில் நடப்பதற்கு அழைப்பு விடுக்கும், புனித பேதுருவின் (1பேது.1,10-16) திருமடல் பகுதியை, இத்திருப்பலியில் முதலில் வாசிக்கக் கேட்டோம் என, மறையுரையை ஆரம்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய்மை உள்ளவராய் வாழ்வதென்பது, கிறிஸ்தவராய் வாழ்வது, புனிதராய் வாழ்வது என்று கூறினார்.

புனிதத்துவம் என்பது, அசாதாரணமானது, இது, மேலான காட்சிகள் அல்லது செபங்கள் என பல நேரங்களில் நாம் கருதுகின்றோம், அது அப்படியல்ல, புனிதத்துவம் என்பது, தூய வாழ்வு பற்றி, நம் ஆண்டவர் நமக்குச் சொல்லியுள்ள பாதையில் நடப்பதாகும் என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது, நமக்கு அளிக்கப்படும் அருளை முழுமையாக எதிர்நோக்கி இருப்பதாகும் என பேதுரு சொல்வதே, புனிதத்துவப் பாதை என்று மறையுரையாற்றிய திருத்தந்தை, புனிதத்துவம் நோக்கிய பாதையில் நடப்பது என்பது, நம்மைச் சந்திக்கவரும் அருளை நோக்கி நடப்பதாகும் என்றார்.

எனவே, புனிதத்துவத்தில் நடப்பதற்கு, விடுதலையடைந்தவர்களாகவும், விடுதலையடைந்ததை உணர்பவர்களாகவும் இருப்பது அவசியம் என்றுரைத்த திருத்தந்தை, நம்மை பல காரியங்கள் அடிமையாக்கி வைத்திருக்கின்றன என எச்சரித்தார்.

விடுதலையடைந்த உணர்வின்றி, ஒருவர் புனிதராய் இருக்க இயலாது என்றும், துன்ப நேரங்களில் உலகின் போக்குக்குத் திரும்பிச் செல்லும் சோதனை எப்போதும் நமக்கு எழுகின்றது என்றும் எச்சரித்த திருத்தந்தை, உலகப்போக்குத் திட்டங்கள் எல்லாவற்றையும் அளிப்பதாக உறுதியளிக்கின்றன, ஆனால் எதையும் அளிப்பதில்லை எனவும் கூறினார். ஆதலால், புனிதத்துவப் பாதை பற்றி தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு ஆண்டவரிடம் செபிப்போம் எனவும், புனிதத்துவப் பாதை என்பது, விடுதலைப் பாதை எனவும், மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.