2018-05-28 17:05:00

மூவொரு கடவுள் பெருவிழாவில் அன்பின் கடவுளைச் சிறப்பிக்கிறோம்


மே,28,2018. தூய ஆவியார் பெருவிழாவிற்கு அடுத்த ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் தூய மூவொரு கடவுள் பெருவிழா, உலகெங்கும் கடவுளின் அன்பைப் பரப்புவதற்கு அழைப்பு விடுக்கின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு, தூய மூவொரு கடவுள் பெருவிழா திருப்பலியின் வாசகங்களை மையப்படுத்தி மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பெருவிழா, கடவுள் ஒருவரே, அவர் தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூன்று ஆள்களாய் இருக்கிறார் என்ற இறைவனின் பேருண்மையைக் கோடிட்டுக் காட்டுகின்றது என்றார்.

கடவுள் இருக்கின்றார் என்பதை நமக்கு வெளிப்படுத்துவதைவிட, அவர் நம்மோடு இருக்கிறார், நம்மீது அன்புசெலுத்துகிறார், நம் சொந்த வரலாற்றில் அவர் ஆர்வமாய் இருக்கின்றார், சிறியவர் மற்றும் தேவையில் இருப்பவர் தொடங்கி, நம் ஒவ்வொருவர் மீதும் அவர் அக்கறையாய் இருக்கின்றார் என்பதை நாம் புரிந்துகொள்வதற்கு, இந்த வாசகங்கள் உதவுகின்றன என்றும் திருத்தந்தை கூறினார்.

இந்த புவியையும், மக்களையும் படைத்த அன்புக் கடவுள் நம்மோடு நெருக்கமாய் இருப்பதை உணர்த்துவதற்காக, நமக்காக மனிதஉரு எடுத்து, இறந்து உயிர்த்தார் என்றும், தூய ஆவியார் அனைத்தையும் உருமாற்றி, நிறைவுக்கு இட்டுச்செல்கிறார் எனவும் திருத்தந்தை கூறினார்.

கடவுள் விண்ணகத்தில் இருந்தாலும், மண்ணகத்திலும் இருக்கின்றார் என விளக்கிய திருத்தந்தை, எப்போதும் அன்போடும், நம்மீதுள்ள அன்பாலும், முடிவில்லாமல் படைத்து, மீட்டு, புனிதப்படுத்தும் கடவுளின் பேருண்மையைத் தியானிப்பதற்கு தூய மூவொரு கடவுள் பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கின்றது, இப்பெருவிழாவைக் கொண்டாடுவோம் என்று கேட்டுக்கொண்டார்.  

மேலும், தூய மூவொரு கடவுள் பெருவிழாவன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், அன்பு எங்கு உள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றார் என்ற உறுதியில், நாம் ஒருவர் ஒருவருடன் ஒன்றிப்பிலும், அன்பிலும், பகிர்விலும் வாழ்வதற்கு, மூவொரு கடவுளின் பேருண்மை நமக்கு அழைப்பு விடுக்கின்றது என்ற சொற்களை வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.