2018-05-28 17:04:00

பாப்பிறை மறைப்பணி கழகங்களுக்காக விண்ணப்பம்


மே,28,2018. “எது நிலைத்திருக்கும்? வாழ்வில் மதிப்புள்ளது எது? எந்தச் செல்வங்கள் மறையாமல் இருப்பவை? கடவுளும் நம் அயலவருமே இவ்வாறு இருப்பவை என உறுதிபடச் சொல்லலாம்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இத்திங்களன்று வெளியாயின.

மேலும், இத்திங்களன்று, ஆண்டு பொது அவையை ஆரம்பித்துள்ள, பாப்பிறை மறைப்பணி கழகங்களுக்கு, காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ள, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கழகங்கள், தலத்திருஅவைகளுக்கு ஆற்றும் முக்கிய பணிகளுக்கு ஆன்மீக மற்றும் பொருளாதார அளவில் ஆதரவு வழங்கப்படுமாறு கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் விண்ணப்பித்துள்ளார்.

செபமே முதல் மறைப்பணி என்பதை வலியுறுத்திக் கூறியுள்ள திருத்தந்தை, ஒவ்வொரு கிறிஸ்தவரும் செபிக்க வேண்டும் என்றும், மறைப்பணிகளுக்கு பேருதவியாக இருப்பது ஆன்மீக ஆதரவு என்றும், இது அளவிட முடியாத உதவி என்றும் கூறியுள்ளார்.

நற்செய்தி அறிவிப்புக்கு முக்கிய கருவியாக இருப்பவர் தூய ஆவியார் என்றும், நாம் அவரோடு ஒத்துழைப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, பாப்பிறை மறைப்பணி கழகங்களின் பணிகளை விளக்கியுள்ளார்.

தலத்திருஅவைகள், நற்செய்தியை அறிவித்து, அதற்குச் சான்று பகர ஒன்று, மற்றதற்கு எப்போதும் உதவி வருகின்றது என்றும், தலத்திருஅவைகள், உயிர்த்த ஆண்டவரின் ஆவியாரால் வழிநடத்தப்பட்டு, தங்கள் பணிகளை உலகின் கடையெல்லைவரை விரிவாக்குகின்றன என்றும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பாப்பிறை மறைப்பணி கழகங்கள் திருப்பீடத்துடன் நெருங்கி ஒத்துழைத்து, 120 நாடுகளில் மறைப்பணியாற்றுகின்றன. 19ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இக்கழகங்களுக்கு, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், பாப்பிறை என்ற பெயரை இணைத்தார்.

மேலும், புர்கினோ ஃபாசோ மற்றும் நிஜர் நாடுகளின் ஆயர்களை, அத் லிமினா சந்திப்பில், இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.