2018-05-28 16:45:00

திருத்தந்தை – கிறிஸ்தவர்கள் சுவாசிக்கும் காற்று மகிழ்ச்சி


மே,28,2018. கிறிஸ்தவர்கள் சுவாசிக்கும் காற்று மகிழ்ச்சி என்றும், கிறிஸ்தவர்கள் தங்களை மகிழ்வோடு வெளிப்படுத்துகின்றனர் என்றும், மகிழ்வை விலைக்கு வாங்க முடியாது மற்றும் அதை கட்டாயப்படுத்தி பெற இயலாது என்றும், இத்திங்கள் காலையில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலையில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பணக்கார இளைஞர் ஒருவர், தன் சொத்துக்களை விட்டுவிட்டு இயேசுவைப் பின்செல்ல மனமில்லாமல், முகம்வாடி வருத்தத்தோடு சென்றது பற்றிக் கூறும் இத்திருப்பலியின் நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி மறையுரையாற்றினார்.

இந்த பணக்கார இளைஞர் போன்று கிறிஸ்தவர்கள் இருக்க முடியாது என்றும், மகிழ்ச்சி, தூய ஆவியாரின் கொடை என்றும், நம் இதயங்களில் மகிழ்ச்சியை விதைப்பவர் தூய ஆவியார் என்றும் திருத்தந்தை கூறினார்.

நினைவு என்ற உறுதியான பாறை மீது, கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியைக் கண்டுகொள்கின்றனர் எனவும், கடவுளின் மகனைச் சந்திக்கும்போது, வருங்காலத்தில் வரவிருப்பவை பற்றிய நம்பிக்கையை, நினைவு ஏற்படுத்துகின்றது எனவும் உரைத்த திருத்தந்தை, நினைவும், நம்பிக்கையும், கிறிஸ்தவர்கள் மகிழ்வுடன் வாழ உதவுகின்றன எனவும் கூறினார்.

மகிழ்ச்சி என்பது, சிரித்து சிரித்து வாழ்வது அல்ல, மகிழ்ச்சி, பொழுதுபோக்கு நிகழ்வும் அல்ல, மாறாக, கிறிஸ்தவ மகிழ்ச்சி என்பது அமைதியாகும், கடவுள் ஒருவரே அளிக்கவல்ல இதயத்தில் வேரூன்றும் அமைதியாகும் அது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்றைய கலாச்சாரம் கொணரும் மகிழ்ச்சி ஒருபோதும் முழுவதும் திருப்திபடுத்த இயலாதது, ஏனெனில் மகிழ்ச்சி தூய ஆவியாரின் கொடை என்றும், இத்திங்கள் காலை மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.