2018-05-28 15:33:00

இமயமாகும் இளமை – விண்வெளி கனவில் மாற்றுத்திறனாளி


இளைஞர் எட்வர்டு டோப்பு(Eddie Ndopu) அவர்கள், தென்னாப்ரிக்க கறுப்பின மாற்றுத்திறனாளி. மாற்றுத்திறனாளர்களை சமுதாயம் நோக்கும் பார்வையை மாற்ற விரும்பும் சமூகப் போராளி. உலக அளவில் புகழ்பெற்ற மாற்றுத்திறனாளிகளின் சமூக நீதி ஆர்வலர். இப்புவியில் மிகவும் சக்திமிக்க மாற்றுத்திறனாளிகளில் ஒருவர் என, MTV இசை தொலைக்காட்சியால் அண்மையில் பெயரிடப்பட்ட இவர், Shaw அறக்கட்டளையால், உலகில் மிகவும் நல்தாக்கத்தை ஏற்படுத்தும் ஐம்பது மாற்றுத்திறனாளர்களில் ஒருவராகவும், Pacific Standard இதழால், உலகின் முப்பது வயதுக்கு உட்பட்ட முப்பது சிந்தனையாளர்களில் ஒருவராகவும் அடையாளம் காட்டப்பட்டுள்ளார். உலகளாவிய Amnesty International மனித உரிமைகள் அமைப்பின் ஆப்ரிக்க இளையோர் திட்ட முன்னாள் பொறுப்பாளர் மற்றும் உலக பொருளாதார அமைப்பின் முன்னாள் ஆய்வாளர். இலண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில், படித்த முதல் ஆப்ரிக்க மாற்றுத்திறனாளி. கானடா Carelton பல்கலைக்கழகத்தில் மிக உயர்ந்த மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டயம் பெற்றுள்ளவர். இளைஞர் எட்வர்டு டோப்பு அவர்கள், இரண்டு வயதில் Spinal Muscular Atrophy என்ற அரிதான நரம்பு சார்ந்த நோயால் தாக்கப்பட்டார். இவர், ஐந்து வயதுக்குள் இறந்து விடுவார் என்று மருத்துவர்கள் கூறினர். ஆனால், ஏழு வயதில் சக்கர நாற்காலியில் தன் வாழ்வைத் தொடங்கிய இவருக்கு, தற்போது வயது 29. மாற்றுத்திறன்கொண்ட மக்கள், தங்களின் குறைகளுக்கு மத்தியில், மகிழ்வாக, தன்னுறுதியோடு, சொந்த காலில் நிற்க வேண்டுமென இவர் விரும்புகிறார், அதற்காக முயற்சித்து வருகிறார். 2018ம் ஆண்டின் உள்தூண்டுதல் தரும் நபர்களில் ஒருவராகப் பெயரிடப்பட்டிருக்கிறார் இவர். சக்கர நாற்காலியில் வாழ்ந்த அறிவியல் மேதை Stephen William Hawking அவர்களே தனக்குத் தூண்டுதல் எனவும், அவரின் விண்வெளிக் கனவை நனவாக்க விரும்புவதாகவும் கூறும் எட்வர்ட் டோப்பு அவர்கள், விண்வெளிக்குப் பயணம் மேற்கொள்ளும் திட்டத்தில் உள்ளார் என செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.