2018-05-28 16:51:00

மனித வாழ்வு குறித்த நன்னெறி விதிமுறைகள் மதிக்கப்படுமாறு...


மே,28,2018. உடன்பிறப்பு உணர்வுகொண்ட பிறரன்புக்கும், நற்செய்திகூறும் பரிவன்புக்கும் சாட்சிகளாய் வாழுமாறு, கத்தோலிக்க மருத்துவர் குழு ஒன்றிடம், இத்திங்களன்று கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

FIAMC எனப்படும், பன்னாட்டு கத்தோலிக்க மருத்துவ கழகங்களின் கூட்டமைப்பின் 22 பிரதிநிதிகளை, இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்க மருத்துவர்கள், மனித வாழ்வு குறித்த நன்னெறி விதிமுறைகளை மதிக்குமாறு வலியுறுத்தினார்.

குரோவேசியத் தலைநகர் Zagrebல், மே 30ம் தேதி முதல், ஜூன் 2ம் தேதி வரை, “மனித வாழ்வு(Humanae Vitae) திருமடல் முதல் இறைவா உமக்கே புகழ்(Laudato si'") திருமடல் வரை வாழ்வின் புனிதத்துவம் மற்றும் மருத்துவத் தொழில்” என்ற தலைப்பில்,  நடைபெறவிருக்கும் 25வது உலக மாநாட்டில், இக்கத்தோலிக்க மருத்துவர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

கத்தோலிக்க மருத்துவர்களாக இருப்பது என்பது, நற்செய்தி கோட்பாடுகளை மறந்துவிடாமல், அவற்றின் அடிப்படையில், ஆன்மீக, அறநெறி மற்றும் உயிரியல் நன்னெறிகளில் நிரந்தரமாக உருவாக்கப்படுவதற்கு அர்ப்பணிப்பதாகும் என்றுரைத்த    திருத்தந்தை, மருத்துவருக்கும், நோயாளருக்கும் இடையே இருக்கவேண்டிய உறவு பற்றியும் எடுத்துச் சொன்னார்.

கத்தோலிக்க மருத்துவர்களாக இருப்பது என்பது, விசுவாசத்திலிருந்து உந்துதல் பெற்ற நலவாழ்வுப் பணியாளர்களாக இருப்பதாகும், மனித வாழ்வை ஆரம்பம் முதல், இறுதிவரை பாதுகாத்து ஊக்குவிப்பதற்கு, துணிச்சல்மிக்க சான்றுகளாய் விளங்குவதாகும் என்று திருத்தந்தை கூறினார்.

ஒழுக்கநெறி கோட்பாடுகளை மதிக்காமல், நோயாளர், பழுதுபார்க்கப்பட வேண்டிய கருவி என்ற போக்கு நிலவி வருகின்றதென்றும், மருத்துவர்கள் மற்றும் நலவாழ்வுப் பணியாளர்களின் மனசாட்சி சுதந்திரம் பாதுகாக்கப்படுவதில் அக்கறை காட்டப்பட வேண்டும் என்றும், திருத்தந்தை கூறினார்.

நோயாளரின் விருப்பத்தை அல்லது நலவாழ்வு அமைப்பின் தேவைகளை நிறைவேற்றுவதோடு மட்டும் மருத்துவர்களின் பங்கு குறைக்கப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்றும், கத்தோலிக்க மருத்துவர், விசுவாசத்திற்கு, சாட்சியாக முதலில் விளங்க வேண்டுமென்றும் திருத்தந்தை கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.