2018-05-25 16:25:00

இரமதான் மாதத்தில் ஏழை முஸ்லிம்களுக்கு காரித்தாஸ் உணவு


மே,25,2018. அம்மான் நகரில் செயல்படும் ஜோர்டன் நாட்டு கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, இரமதான் புனித மாதத்தில், மிகவும் ஏழை முஸ்லிம்களுக்கென இரக்கத்தின் உணவகத்தை இந்த ஆண்டும் தொடங்கி நடத்தி வருகிறது என, பீதேஸ் செய்தி கூறுகின்றது.

ஜோர்டன் நாட்டிலுள்ள, இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை அலுவலகத்தின் ஆதரவுடன் இயங்கும் இரக்கத்தின் உணவகத்தில், இரமதான் புனித மாதத்தில், ஏழை முஸ்லிம்களுக்கு, இஃப்தார் உணவை வழங்கி வருகின்றது, ஜோர்டன் காரித்தாஸ் அமைப்பு.

ஜோர்டன் காரித்தாசுடன், இளையோர் தன்னார்வலர்கள் இணைந்து இந்த உதவியை ஆற்றி வருகின்றனர். காரித்தாசின் இந்த இரக்கத்தின் உணவகம், ஜோர்டன் மக்களுடன் ஒன்றிப்பையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என பீதேஸ் செய்தி கூறுகின்றது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் யூபிலி ஆண்டை அறிவித்த சில நாள்களுக்குப் பின், 2015ம் ஆண்டு டிசம்பர் 23, புதன்கிழமையன்று, இரக்கத்தின் உணவகம் முதலில் தொடங்கப்பட்டது. இந்த உணவகத்தால் உதவி பெறுபவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் எனவும் பீதேஸ் செய்தி கூறுகின்றது.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.