2018-05-25 16:08:00

Golden Gala நிகழ்வில் கலந்துகொள்ள ஏழைகளுக்கு அழைப்பு


மே,25,2018. இறையன்பும், பிறரன்பும் நம் வாழ்வின் இரு மூலைக்கற்களாக அமைய வேண்டும் என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இவ்வெள்ளியன்று வெளியானது.

மேலும், மே 31, வியாழன் பிற்பகலில், உரோம் ஒலிம்பிக் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் Golden Gala பன்னாட்டு நிகழ்வில் கலந்துகொள்வதற்கு, ஏழைகள், வீடற்றவர், புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் மற்றும் தேவையில் இருப்போர்க்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால் அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தையின் தர்ம செயல்களுக்குப் பொறுப்பாளர்.

இந்நிகழ்வில், இத்தாலிய விளையாட்டு வீரர்கள் கூட்டமைப்பு, திருத்தந்தையின் இந்த ஏழைகளுக்காக, இலவசமாக இடங்களை ஒதுக்கியுள்ளது. சான் எஜிதியோ பிறரன்பு குழு, அக்சீலியம் கழகம், வத்திக்கான் விளையாட்டு வீரர்கள் கழகம் ஆகியவற்றின் தன்னார்வலர்களுடன், இந்த ஏழைகள், Golden Gala பன்னாட்டு நிகழ்வில் கலந்துகொள்வார்கள்.

உலகளாவிய மற்றும் எளிமையான விளையாட்டின் அழகின் வழியாக, நட்புணர்வைக் கொண்டாடுவதாக, இந்நிகழ்வு அமையும். இந்நிகழ்வின் இறுதியில், ஒலிம்பிக் விளையாட்டு அரங்கத்தின் “South Curve” எனுமிடத்தில், ஏழைகளுக்கு உணவு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.