2018-05-25 15:53:00

குடும்பத்தின் நலவாழ்வு உலகுக்கு, திருஅவைக்கு அவசியம்


மே,25,2018. ஒரு நல்ல குடும்பம் என்பது, நாட்டின் அரசியலமைப்பில் அறிவிக்கப்பட்டுள்ள விழுமியங்களை வாழ்வால் வெளிப்படுத்துவது, சமுதாயத்தில் ஓர் அங்கம் என்று உணர்வதற்கு கற்றுக்கொடுப்பது, நாட்டுப்பற்றுள்ள மற்றும் நேர்மையான குடிமக்களாக நடப்பது போன்றவையாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய குழு ஒன்றிடம் இவ்வெள்ளியன்று கூறினார்.

குடும்பங்கள், இந்தக் கடமைகளை நிறைவேற்றாவிடில், ஒரு நாடு நிலைத்திருக்க இயலாது என்றும், குடும்பங்களில், பிள்ளைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே, குடியுரிமை கல்வி வழங்கப்பட வேண்டும் என்றும், திருத்தந்தை கூறினார்.

ஏறத்தாழ ஆறாயிரம், உரோம் காவல்துறை மற்றும் மத்திய நலவாழ்வு துறை அதிகாரிகள், பணியாள்கள், மற்றும் அவர்களின் குடும்பத்தினரை, இவ்வெள்ளி நண்பகலில், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பங்களின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.

இக்காலத்தில் இடம்பெறும் ஆழமான மாற்றங்களை, பொது பாதுகாப்புத்துறையினர் தங்கள் பணிகளில் தொடர்ந்து அனுபவித்து வருவதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, குடும்பத்தில் கிடைக்கும் அனுபவமும், இந்தப் பணிக்கு உதவும் என்று கூறினார்.

நாம் அன்புகூரக் கற்றுக்கொடுப்பதும், அன்புகூரக் கற்றுக்கொள்வதும் முதல் குழு குடும்பம் எனவும், குடும்பச் சூழலிலே விசுவாசம் பற்றியும், நன்மைகள் புரிவது பற்றியும் கற்றுக்கொடுக்கப்படுகின்றது எனவும் கூறியத் திருத்தந்தை, குடும்பத்தின் நல்வாழ்வு, உலகு மற்றும் திருஅவையின் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது எனவும் கூறினார்.

விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்பங்கள் குறித்தும் கூறியத் திருத்தந்தை, திருஅவை, ஓர் அன்னையாக, இறையன்பில் தொடர்ந்து வாழ கற்றுக்கொடுக்கின்றது மற்றும் குடும்பங்களின் நல்வாழ்வுக்காகத் தன்னை அர்ப்பணித்துள்ளது என்ற, உரோம் காவல்துறை மற்றும் நலவாழ்வு துறை பணியாளர்களிடம் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.