2018-05-24 15:52:00

திருத்தந்தை : மேன்மையான சீன மக்களுக்காக திருப்பலி


மே,24,2018. மே 24, இவ்வியாழனன்று, கிறிஸ்தவர்களின் சகாய அன்னையாகிய ஷேஷான்(Sheshan) அன்னை மரியா விழா, சீனாவின் ஷங்காய் நகரில் சிறப்பிக்கப்பட்ட வேளை, இவ்வியாழன் காலையில் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியை, மேன்மையான சீன மக்களுக்காக அர்ப்பணிப்பதாகச் சொல்லி, அம்மக்களுக்காகச் செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இந்நாளைய திருப்பலியின் முதல் வாசகத்தில் வாசிக்கப்பட்ட, திருத்தூதர் யாக்கோபு செல்வந்தர்களைச் சாடுவது பற்றிய பகுதியை (யாக்.5,1-6) மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மை நெறிதவறச் செய்யும் மற்றும், நம்மை அடிமைகளாக்கும் செல்வங்களினின்று நம் இதயங்களை விலக்கி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஏனெனில், செல்வம், பிறருக்கு அளிப்பதற்காக நமக்கு அளிக்கப்படுகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

செல்வந்தர்கள், தங்கள் வேலையாள்களுக்குக் கொடுக்காத கூலியும், அந்த பணியாள்களின் கூக்குரலும் ஆண்டவரின் காதுகளை எட்டியுள்ளன என்றும்,  செல்வந்தர்கள் சேர்த்து வைக்கும் செல்வம் மக்கிப்போகும் மற்றும் துருப்பிடிக்கும் என்றும் திருத்தூதர் யாக்கோபு கூறியுள்ளதையும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

செல்வர் பற்றி விவிலியம் கடுமையாய்ச் சாடுகிறது என்றும், செல்வர்களே, உங்களுக்கு ஐயோ கேடு என இயேசு கூறியுள்ளார் என்றும் மறையுரையில் கூறியத் திருத்தந்தை, இயேசுவின் மலைப்பொழிவு போதனையில், ஏழ்மையே மையமாக இருந்ததெனவும், ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என இயேசு கூறியதையும் சுட்டிக்காட்டினார்.

ஆயினும் வரலாற்றில், ஏழ்மை பற்றிய இப்போதனை, சமூக மற்றும் அரசியல் சார்ந்தது என ஒதுக்கி வைக்கிறோம், ஆனால், இது முழுவதும் நற்செய்தியை அடிப்படையாகக் கொண்டது என விளக்கிய திருத்தந்தை, செல்வம், நம் சகோதரர், சகோதரிகளுடன் நல்லிணக்கம் கொள்வதிலிருந்தும், அயலவரை அன்புகூர்வதிலிருந்தும் நம்மை அகற்றி விடுகின்றது என எச்சரித்தார்.

முதலீடுகளைக் காத்துக்கொள்வதற்காக இத்தாலியிலும்கூட, மக்கள் வேலையின்றி உள்ளனர் எனவும், இது கடவுளின் இரண்டாவது கட்டளைக்கு எதிரானது என்றும் கூறியத் திருத்தந்தை, செல்வம் நம்மை அடிமைகளாக்கும் சக்தியைக் கொண்டுள்ளது, ஆகவே, செல்வத்தினின்று நம்மை விலக்கிக்கொள்ள ஆண்டவரிடம் மன்றாடுவோம் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.