2018-05-23 16:22:00

வன்முறையிலிருந்து குடிமக்கள் அதிகமான அளவில் காப்பற்றப்பட..


மே,23,2018. ஆயுத மோதல்களில் அப்பாவி குடிமக்களின் பாதுகாப்பு குறித்து, ஐ.நா. தலைமையகத்தில், ஐ.நா. பாதுகாப்பு அவை நடத்திய பொது விவாதத்தில் இச்செவ்வாயன்று உரையாற்றிய, ஐ.நா.பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள், ஆயுத மோதல்களின்போது, வன்முறையிலிருந்து அப்பாவி குடிமக்கள் அதிகமான அளவில் காப்பற்றப்பட வேண்டுமென உலக அரசுகளை வலியுறுத்தினார்.

உலக அளவில், 12 கோடியே 80 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன எனவும், இந்நெருக்கடி நிலைக்கு, பெரும்பாலும் போரும் வன்முறையுமே காரணம் என்றும் குறை கூறினார் கூட்டேரெஸ்.

கடந்த ஆண்டில், ஆப்கானிஸ்தான், மத்திய ஆப்ரிக்க குடியரசு, காங்கோ சனநாயக குடியரசு, ஈராக், சொமாலியா, ஏமன் ஆகிய ஆறு நாடுகளில் இடம்பெற்ற மோதல்களில், 26 ஆயிரத்துக்கு அதிகமான அப்பாவி குடிமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர் என்பதையும் சுட்டிக்காட்டினார், ஐ.நா.பொதுச் செயலர்.

மோதல்களில் சிக்கும் அப்பாவி குடிமக்களுக்கு அதிகளவில் பாதுகாப்பு அளிப்பதற்கு, அரசுகள், தேசிய அளவில் கொள்கைகளை வகுக்குமாறு வலியுறுத்திய கூட்டேரெஸ் அவர்கள், சிறாரைப் படைப்பிரிவில் சேர்ப்பதைத் தடுப்பதற்கு, ஐ.நா.வுடன் இணைந்து பணியாற்ற, ஏற்கனவே 17 குழுக்கள் செயல்திட்டங்களில் கையெழுத்திட்டுள்ளன எனவும் அறிவித்தார்.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.