2018-05-23 16:34:00

வத்திக்கான் வங்கி முதலீடுகளில் கத்தோலிக்க அறநெறியை...


மே,23,2018. பொதுவாக வத்திக்கான் வங்கி என அறியப்படும், IOR என்ற சமயப் பணிகள் நிறுவனம், முதலீடுகளில் கத்தோலிக்க அறநெறி நடைமுறைகளைப் பின்பற்றும் வழிகளைத் தேடுகின்றது என்று, அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கை கூறுகின்றது.

வத்திக்கானின் சமயப் பணிகள் நிறுவனம், மே 22, இச்செவ்வாயன்று வெளியிட்ட 128 பக்க அறிக்கையில், 2017ம் ஆண்டில் இந்நிறுவனத்திற்கு, 3 கோடியே 19 இலட்சம் யூரோக்கள் இலாபம் என்றும், இந்த நிதி, திருப்பீடத்திடம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த இலாபம் 3 கோடியே 60 இலட்சம் யூரோக்கள் என்றுரைக்கும் இந்த அறிக்கை, இந்த நிறுவனத்தின் 4 கோடியே 43 இலட்சம் யூரோக்களின் முக்கிய வருவாய், முதலீடுகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து கிடைப்பவை எனவும் கூறியுள்ளது.   

இந்த நிறுவனம், 15 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு, 530 கோடி யூரோக்கள் சொத்துடன்  பணியாற்றுகின்றது. மேலும் இதில் கணக்கு வைத்திருக்கும் தனிப்பட்ட நபர்கள், வத்திக்கானில் வேலை செய்பவர்கள், வேலை செய்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் திருப்பீடத்துடன் தொடர்புடைய தூதர்கள் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.