2018-05-23 16:06:00

பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்களுடன் சந்திப்பு


மே,23,2018. சிலே நாட்டு அருள்பணியாளர் ஒருவரின் பாலியல் முறைகேடுகள், அவர் அதிகாரத்தையும், மனச்சான்றையும் தகாத வழியில் பயன்படுத்தியது ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களை, வருகிற ஜூன் மாதத் தொடக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்திக்கவுள்ளார் என, திருப்பீட செய்தி தொடர்பகம் இச்செவ்வாயன்று அறிவித்துள்ளது.

சிலே நாட்டின் Sagrado Corazón de Providencia(“El Bosque”) பங்குத்தளத்தில், அருள்பணியாளர் Fernando Karadima அல்லது அவரைப் பின்பற்றியோரின் பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்களில் இரண்டாவது குழுவினரை, வருகிற ஜூன் ஒன்று முதல் 3ம் தேதி வரை, சாந்தா மார்ததா இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை சந்திக்கவிருக்கும் இந்த இரண்டாவது குழுவில் உள்ளவர்களில் ஐந்து பேர் அருள்பணியாளர்கள். இவர்கள், பாலியல் முறைகேடுகளாலும், அதிகாரம் மற்றும் மனச்சான்றை தகாத வழியில் பயன்படுத்தியவர்களாலும் பாதிக்கப்பட்டவர்கள். திருத்தந்தையைச் சந்திக்கவுள்ள மேலும் இருவர் அருள்பணியாளர்கள். இவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு, நீதி விசாரணையிலும், ஆன்மீகத்திலும் உதவி வருகிறவர்கள். மேலும், இக்குழுவில் இரு பொது நிலையினரும் உள்ளனர். இவர்கள், பாதிக்கப்பட்டவரின் துன்பங்களில் பங்கு கொள்பவர்கள். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில், இந்தக் குழுவினர் தங்கியிருப்பார்கள்.

அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் வேதனைகளைக் கேட்டு, அவர்களோடு தனது நெருக்கத்தை காட்டுவதற்கு, திருத்தந்தை விரும்புகிறார் என்றும், பாதிக்கப்பட்டுள்ள இவர்களுக்காக சிலே மக்கள் தொடர்ந்து செபிக்குமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளதாகவும், திருப்பீட செய்தி தொடர்பகம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.