2018-05-22 15:08:00

இத்தாலிய ஆயர்களுக்கு திருத்தந்தை உரை


மே,22,2018. இறையழைத்தல் குறைந்து வருவது, நற்செய்திகூறும் ஏழ்மையும், ஒளிவுமறைவற்ற தன்மையும், மறைமாவட்டங்களைக் குறைத்தலும், இணைத்தலும் ஆகிய மூன்று தலைப்புகளில், இத்திங்கள் மாலையில், இத்தாலிய ஆயர் பேரவையினரிடம், தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆண்டு கூட்டத்தை ஆரம்பித்துள்ள இத்தாலிய ஆயர்களை இத்திங்கள் மாலையில், வத்திக்கானின் ஆயர்கள் மாமன்ற அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்களோடு தான் பகிர்ந்துகொள்ள விரும்பும் கருத்துக்கள் பற்றி விரிவாகப் பேச விரும்புவதாகவும், ஆயர்கள் தங்கள் பேரவைகளில் கலந்துரையாட அவை உதவியாக இருக்கும் எனவும் கூறினார்.

திருத்தந்தையை இங்கு விமர்சிப்பது பாவமில்லை, அது ஆற்றப்படலாம் என்றுரைத்த திருத்தந்தை, தான் கருத்தாய் இருக்கின்ற, இறையழைத்தல் குறைந்து வருவது, நற்செய்திகூறும் ஏழ்மையும், ஒளிவுமறைவற்ற தன்மையும், மறைமாவட்டங்களைக் குறைத்தலும், இணைத்தலும் ஆகிய மூன்று தலைப்புகள் பற்றி விளக்கினார்.

இறையழைத்தல், விசுவாசத்தின் கொடை என்று சொல்லி, அவற்றைப் பகிர்ந்துகொள்வதில் ஆயர்கள் தாராளமாக இருக்குமாறும் கூறியத் திருத்தந்தை, தங்களின் நிர்வாகம் குறித்து ஒருநாள் கணக்கு கொடுக்க வேண்டியவர்கள் என்ற வகையில், ஆயர்கள், திருஅவையின் சொத்துக்களைப் பராமரிப்பதில் எடுத்துக்காட்டாய் விளங்குமாறும் கேட்டுக்கொண்டார்.  

மறைமாவட்டங்களைக் குறைத்தல் மற்றும் இணைத்தலைப்பொருத்தவரை, இது ஆற்றப்பட முடியும் மற்றும் ஆற்றப்பட வேண்டும், அதேநேரம், மேய்ப்புப்பணி கண்ணோட்டத்தோடு, குறிப்பாக, கைவிடப்பட்டதாக மக்கள் உணரும் இடங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும், இத்தாலிய ஆயர்களிடம் திருத்தந்தை கூறினார்.

தான் குறிப்பிட்ட இந்தக் கருத்துகள் பற்றி ஆயர்கள், மனம்திறந்து சுதந்திரமாகப் பேசுவதை வரவேற்று, ஆயர்களின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.