2018-05-22 15:29:00

புதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள ஒசாகா பேராயர் மான்யோ


மே,22,2018. மே 20, இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால், புதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள, ஜப்பானின் ஒசாகா பேராயர் தாமஸ் அக்குய்னாஸ் மான்யோ (Thomas Aquinas Manyo) அவர்கள், அந்நாட்டின் வரலாற்றில் ஆறாவது கர்தினாலாக உள்ளார்.

இந்த அறிவிப்பு குறித்து யூக்கா செய்தியிடம் பேசிய புதிய கர்தினால் மான்யோ அவர்கள், கர்தினாலாக தான் அதிகத் தகுதியுள்ளவர் என நினைக்கவில்லை எனவும், அந்த அறிவிப்பு நம்புவதற்கு மிகவும் கடினமாக இருந்ததெனவும் கூறினார்.

ஜப்பானின் நாகசாகி பகுதியில் 1949ம் ஆண்டில் பிறந்த புதிய கர்தினால் மான்யோ அவர்கள், நாகசாகி உயர்மறைமாவட்டத்திற்கென, 1975ம் ஆண்டில் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார். ஹிரோஷிமா ஆயராக, 2011ம் ஆண்டு செப்டம்பரில் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், 2014ம் ஆண்டு ஆகஸ்டில் ஒசாகா உயர்மறைமாவட்ட பேராயராக மாற்றப்பட்டார்.

நாகசாகியைச் சேர்ந்த புதிய கர்தினால் மான்யோ அவர்கள், ஹிரோஷிமாவில் அமைதி இயக்கத்தில் முழுமூச்சுடன் ஈடுபட்டிருப்பவர். 150 ஆண்டுகளுக்குமுன்னர், ஜப்பானில் இடம்பெற்ற கிறிஸ்தவர்க்கெதிரான சித்ரவதைகளில் ஏறத்தாழ 3,400 கிறிஸ்தவர்கள் நாகசாகியைவிட்டு வெளியேறினர். 600க்கும் மேற்பட்டோர் இறந்தனர். அக்காலத்தில் நசுக்கப்பட்ட கிறிஸ்தவர்களை, முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கு, புதிய கர்தினால் மான்யோ அவர்கள் முயற்சித்து வருகிறார்.      

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.