2018-05-22 15:15:00

கராச்சி பேராயர் கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருப்பது...


மே,22,2018. பாகிஸ்தானின் கராச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ் அவர்கள், கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து, அந்நாட்டின் சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்துடன், முஸ்லிம் அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்களும் இணைந்து தங்கள் மகிழ்வை வெளியிட்டுள்ளனர்.

மே 20, இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்த 14 புதிய கர்தினால்களுள் ஒருவராக, கராச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ் அவர்களின் பெயரைக் கேட்டவுடன், பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் அகமகிழ்ந்து ஆண்டவரைப் போற்றினர் என செய்திகள் கூறுகின்றன.

இந்த அறிவிப்பு தனக்கு அதிர்ச்சி செய்தியாக இருந்ததெனவும், திருஅவைக்குத் தாழ்மையோடு பணிபுரியவும், கராச்சியிலும், நாடு முழுவதிலும் நல்லிணக்கத்தைத் தொடர்ந்து ஊக்குவிக்கவும் தயாராக இருப்பதாக, பீதேஸ் செய்தியிடம் கூறியுள்ளார், புதிய கர்தினால் ஜோசப் கூட்ஸ்.

பாகிஸ்தானின் முதல் கர்தினாலாகிய ஜோசப் கொர்தெய்ரோ (Joseph Cordeiro) அவர்கள்  1994ம் ஆண்டில் இறந்த பின்னர், அந்நாட்டிற்கு இரண்டாவது கர்தினாலாக, இஞ்ஞாயிறன்று, பேராயர் ஜோசப் கூட்ஸ் அவர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார். கர்தினால் ஜோசப் கொர்தெய்ரோ அவர்கள், 1958ம் ஆண்டு முதல், கராச்சி பேராயராகப் பணியாற்றியவர்.

பாகிஸ்தானின் இரயில்வே அமைச்சர் Khawaja Saad Rafique அவர்கள், இஞ்ஞாயிறன்று தன் டுவிட்டரில், பேராயர் ஜோசப் கூட்ஸ் அவர்கள், கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருப்பது, பாகிஸ்தான் கிறிஸ்தவ சமூகத்திற்கு மிகுந்த மகிழ்வை அளிப்பது மற்றும், பேராயர் அவர்கள், பாகிஸ்தான் கிறிஸ்தவ சமூகத்திற்கும், நாட்டிற்கும் பெருமையாக உள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.