2018-05-22 15:33:00

அரசியலமைப்புக்கு சாதியும் சமயப் பாகுபாடும் அச்சுறுத்தல்


மே,22,2018. மூன்று வட இந்திய மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெறுவதற்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கின்றவேளை, பாகுபாடு மற்றும் உரிமை மீறல்களிலிருந்து தங்கள் சமூகங்களைப் பாதுகாப்பதற்கு உறுதியளிக்கும் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிப்பதற்கு கிறிஸ்தவத் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.

இந்துத்துவ ஆதரவு பிஜேபி கட்சி ஆளும் மத்திய பிரதேசம், இராஜஸ்தான், சட்டீஸ்கார் ஆகிய மாநிலங்களில், வருகிற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்தல்கள் நடைபெறவுள்ளவேளை, சிறுபான்மை மதங்களுக்கு எதிராய் வேலைசெய்யும் கட்சிகளுக்கு ஆதரவு வழங்குவதில்லை என, கிறிஸ்தவ குழுக்கள் கூறியுள்ளன.

இந்தியாவின் நிலை குறித்து யூக்கா செய்தியிடம் பேசிய, போபால் பேராயர் லியோ கொர்னேலியோ அவர்கள், இந்தியாவின் சமயச்சார்பற்ற அரசியலமைப்புக்கு, சாதியும் சமயப் பாகுபாடும் அச்சுறுத்தலாக உள்ளன என்று எச்சரித்துள்ளார்.

இந்திய வரலாற்றில் மிகவும் நெருக்கடியான காலத்தில் இருக்கின்றோம், நாட்டில் மக்கள் சாதி மற்றும் சமயத்தின் அடிப்படையில் பிளவுண்டு இருக்கின்றனர் என்றும்,  சமயச்சார்பற்ற அரசியலமைப்பைப் பாதிக்கும் மிகவும் ஆபத்தான நிலை நிலவுகின்றது என்றும் உரைத்த பேராயர் லியோ கொர்னேலியோ அவர்கள், எத்தகைய சூழல் நிலவினாலும், ஏழைகள் மற்றும் தேவையில் இருப்போர்க்கு திருஅவை தொடர்ந்து பணியாற்றும் என்று கூறினார்.

சமய சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக நிலவும் சகிப்பற்ற தன்மை குறித்து கலந்துரையாடுவதற்கென போபாலில் மே 19ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், ஏழு வட இந்திய மாநிலங்களிலிருந்து ஏறத்தாழ 700 கிறிஸ்தவப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.  

130 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் 2.3 விழுக்காட்டினர் மட்டுமே கிறிஸ்தவர்கள். 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.