2018-05-21 15:36:00

இமயமாகும் இளமை – அம்மாவின் நெஞ்சுறுதியை வியக்கும் மகள்


மும்பையில் வாழ்கின்ற ஓர் இளம்பெண், “மும்பை மனிதர்கள்” (Humans of Bombay)   என்ற முகநூலில் தன் அம்மா பற்றி பெருமையுடன் இவ்வாறு பகிர்ந்து கொண்டுள்ளார்.

என் அம்மாவின் அம்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தபோது என் அம்மாவுக்கு வயது பதினாறு. அச்சமயத்தில் அவரின் அப்பாவும் ஓய்வுபெறும் வயதில், உடலளவில் சோர்வடைந்திருந்தார். இதனால் தன் உடன்பிறப்புக்களைக் காப்பாற்றும் பொறுப்பை என் அம்மாவே ஏற்றார். கல்லூரியில் படித்த நாள்களில் பகுதிநேர வேலைக்குச் சென்று, அதன் வழியாக, ஒவ்வொரு மாதமும் கிடைத்த நூறு ரூபாயை வைத்து வீட்டிற்குத் தேவையான பொருள்கள் வாங்கி குடும்பத்தை நடத்தினார். பட்டப்படிப்பு முடித்ததும் என் அம்மாவுக்கு வைர வியாபாரி ஒருவரிடம் வேலை கிடைத்தது. அதில் கிடைத்த வருமானத்தில், தன் தங்கையை படிக்க வைத்து, திருமணமும் செய்து வைத்தார். என் அம்மா, அவர் தங்கைக்கு, அம்மாவாக, தோழியாக, சகோதரியாக இருந்து பராமரித்தார். பின் என் அம்மாவுக்குத் திருமணம். இது நடந்த சில வருடங்களில் நான் பிறந்தேன். ஆனால் 1999ம் ஆண்டில் என் அப்பா ஒரு விபத்தில் இறந்தார். அப்போது என் அம்மாவுக்கு வயது 32. அதன்பின்னர் மறுமணம் செய்துகொள்ளாமல், பலரும் கனவு காண இயலாத ஒரு சிறந்த வாழ்க்கையை எனக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறார் என் அம்மா. கண்டிப்பான, பழமையான பழக்கங்களைக் கொண்டவராக உள்ள என் அம்மா, எனக்குச் சிறந்த தோழியாகவும் இருக்கிறார். என் அப்பா இறந்து ஆறு ஆண்டுகள் சென்று, எங்களுக்கு ஒரு வீடு வாங்கினார் அம்மா. எல்லா ஆவணங்கள், கடன் மற்றும் எல்லாப் பிரச்சனைகளையும் அம்மாவே தனியொரு ஆளாகச் சரிசெய்தார். ஒருமுறை என் அம்மாவிடம், உங்களுக்கு எங்கிருந்து இந்தச் சக்தி வந்தது என்று கேட்டேன். அதற்கு என் அம்மா, இந்த உலகமும், கடவுளும் என்னை வழிநடத்தியுள்ளனர் என்றார்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.