2018-05-21 16:16:00

திருத்தந்தை - தூய ஆவியார் இதயங்களை மாற்றுகிறார்


மே,21,2018. தூய ஆவியார், அச்சம் நிறைந்திருந்த சீடர்களை அச்சமற்ற மனிதர்களாகவும், பூட்டிய அறைக்குள் குழம்பிய நிலையில் இருந்த சீடர்களை, துணிச்சலான மனிதர்களாகவும் மாற்றினார், இச்சீடர்கள் இயேசுவுக்குச் சான்று பகர்ந்தனர் என்று, இஞ்ஞாயிறு திருப்பலியில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில், இஞ்ஞாயிறு காலையில், ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு தூய ஆவியார் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருப்பலியின் மூன்று வாசகங்களையும் மையப்படுத்தி மறையுரையாற்றுகையில், தூய ஆவியார் இதயங்களையும், சூழ்நிலைகளையும் மாற்றுகிறார், அவரே திருஅவையின் இதயம் ஆகிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.

உண்மையான மாற்றம் நமக்குத் தேவைப்படும்போது, தூய ஆவியாரே, கடவுளின் வல்லமையாகவும், வாழ்வை அளிப்பவராகவும் உள்ளார் என்றும், ஒவ்வொரு நாளும் அவர் நம் வாழ்வை உலுக்குவதை உணர்வது, நம் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு நல்லது என்றும் கூறினார், திருத்தந்தை.

தூய ஆவியார், திருத்தூதர் பணிகளில் ஆற்றியது போன்று, இன்றும் தொடர்ந்து, மிகவும் கற்பனைக்கெட்டாத சூழல்களில் ஊடுருவுகிறார் என்றுரையாற்றிய திருத்தந்தை, தூய ஆவியார், திருஅவையின் இதயமாக, நம்பிக்கையில் அதைப் புதுப்பிக்கிறார், மகிழ்வால் நிரப்புகிறார் மற்றும் புதிய வாழ்வால் மலரச் செய்கின்றார் என்றும் கூறினார்.

தூய ஆவியாரால் வாழ்பவர்கள், கடவுள் மற்றும் உலகை நோக்கி இழுத்துச் செல்லப்படுவதை உணர்வார்கள் என்று கூறி, மறையுரையை நிறைவு செய்தார்,  திருத்தந்தை பிரான்சிஸ்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.