2018-05-19 15:05:00

கச்சின் கிறிஸ்தவர்கள் கட்டாயமாக புலம்பெயர்தல்


மே,19,2018. மியான்மார் இராணுவத்திற்கும், சிறுபான்மை கச்சின் இன புரட்சியாளர்களுக்கும் இடையே இடம்பெறும் ஆயுத மோதல்களால், அப்பகுதியின் ஏழாயிரத்திற்கு மேற்பட்ட கச்சின் இன கிறிஸ்தவர்கள், தங்கள் வீடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேறியுள்ளனர் என்று, கச்சின் பகுதி ஆயர் ஒருவர் தெரிவித்தார்.

கச்சின் மாநிலத்தில் இடம்பெறும் வன்முறை மற்றும் கிறிஸ்தவர்களின் நிலைமை குறித்து, பீதேஸ் செய்திக்கு அனுப்பிய தகவலில், இவ்வாறு கூறியுள்ளார், Myitkyina மறைமாவட்டத்தின் ஆயர் Francis Daw Tang.

மியான்மார் இராணுவம், கடந்த ஏப்ரல் மாத ஆரம்பத்தில், சீன எல்லையிலுள்ள பகுதியை  தாக்குவதற்கு ஆரம்பித்ததில், பல கிராமங்கள் தாக்கப்பட்டன மற்றும் குடிமக்கள் அப்பகுதியைவிட்டு வெளியேறத் தொடங்கினர் என்றும், ஆயர் கூறினார்.

இம்மக்களில் காடுகளில் சிக்கிய பலர், புரட்சியாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், குறைந்தது மூன்று வாரங்களுக்கு உணவின்றியும், காடுகளைவிட்டு வெளியேற இயலாமலும் இருந்தனர் என்றும் ஆயர் தெரிவித்தார்.

தற்போது, பங்குத்தளங்களில், 243 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்டோர்  பராமரிக்கப்படுகின்றனர் என்றும் கூறிய ஆயர் டாங் அவர்கள், அப்பாவி குடிமக்கள் கொல்லப்படுவதும், காயமடைவதும், வன்முறைக்கு அஞ்சி நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வெளியேறுவதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என்று கூறினார்.

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.