2018-05-18 15:21:00

தன்னைச் சாராத நிகழ்வுகளில் நேரத்தை வீணாக்காமல் இருக்க...


மே,18,2018. மேய்ப்பர்கள், அன்புகூரவும், ஆடுகளைப் பாரமரிக்கவும், சிலுவையை ஏற்கத் தங்களையே தயாரிக்கவும், பிறரின் வாழ்வில் தலையிடும் சோதனைகளை வெல்லவும் வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளிக்கிழமை காலையில் மறையுரையாற்றினார்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வெள்ளிக்கிழமை காலையில் நிறைவேற்றிய திருப்பலியில், இயேசுவுக்கும், பேதுருவுக்கும் இடையே நடந்த உரையாடல் பற்றிச் சொல்லும் நற்செய்தி வாசகத்தை (யோவா.21,15-19) மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டவரோடு உரையாடலில் ஈடுபடுவதற்கு முதல் படி அன்பு என்று கூறினார்.

இறைமகனின் உண்மையான சீடர்களாக வாழ்வதற்கு முதலில் முக்கியமானது அன்பு என்றும், அதற்கு அடுத்ததாக, தங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை அக்கறையுடன் பராமரிப்பது என்றும், இதுவே ஓர் ஆயர், ஓர் அருள்பணியாளர் ஆகியோர், மேய்ப்பராக இருப்பதன் தனித்துவம் என்றும், மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒரு மேய்ப்பரின் திசைமானி என்ன என்பதை விளக்கிய திருத்தந்தை, ஆண்டவரை ஏற்பவர்கள், மறைசாட்சியத்திற்கும், சிலுவையைச் சுமப்பதற்கும், விரும்பாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கும் தயாராக இருக்க வேண்டும், இதுவே மேய்ப்பரின் பயணத்தை வழிநடத்தும் திசைமானி என்று கூறினார்.

இயேசுவுக்கும், பேதுருவுக்கும் இடையே நடந்த உரையாடலின் இறுதிப் பகுதி, பிறரின் வாழ்வில் தலையிடும் சோதனைகளை வெல்வதற்கு அழைப்பு விடுக்கின்றது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் ஆயர் தனது மந்தையை அன்புகூர்ந்து, அதன்மீது அக்கறையாய் இருப்பார், தனது நேரத்தை, தன்னைச் சாராத குழுக்களில் வீணாக்கமாட்டார் என்று கூறினார்.      

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.