2018-05-18 15:50:00

கர்தினால் கஸ்த்ரில்யோன் ஹோயோஸ் காலமானார்


மே,18,2018. கொலம்பியா நாட்டின் கர்தினால் தாரியோ கஸ்த்ரில்யோன் ஹோயோஸ் (Darío Castrillón Hoyos) அவர்கள் காலமானதையடுத்து, செபங்களும், அனுதாபங்களும் நிறைந்த தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கர்தினால்கள் அவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ சொதானோ அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், திருஅவைக்கு, குறிப்பாக, திருப்பீட குருக்கள் பேராயத்திற்கும், திருப்பீட Ecclesia Dei அவைக்கும், கர்தினால் கஸ்த்ரில்யோன் ஹோயோஸ் அவர்கள் ஆற்றியுள்ள பணிகளைப் பாராட்டியுள்ளதோடு, அவரின் ஆன்மா நிறைசாந்தியடைய தனது செபங்களையும் தெரிவித்துள்ளார்.

88வது வயது நிரம்பிய கர்தினால் கஸ்த்ரில்யோன் ஹோயோஸ் அவர்கள், உரோம் நகரில் மே 18, இவ்வெள்ளிக்கிழமை அதிகாலையில் இறைபதம் எய்தினார்.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் மெடெலின் நகரில் 1929ம் ஆண்டில் பிறந்த கர்தினால் கஸ்த்ரில்யோன் ஹோயோஸ் அவர்கள், 1952ம் ஆண்டில் அருள்பணியாளராகவும், 1971ம் ஆண்டில் ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.

1998ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதியன்று, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்ட இவர், 1996ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டுவரை, திருப்பீட குருக்கள் பேராயத் தலைவராகவும், இரண்டாயிரமாம் ஆண்டு முதல், 2009ம் ஆண்டுவரை, திருப்பீட Ecclesia Dei அவையின் தலைவராகவும் பணியாற்றினார்.  

கர்தினால் கஸ்த்ரில்யோன் ஹோயோஸ் அவர்களின் அடக்கச்சடங்கு திருப்பலி, மே 19, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் நடைபெறும். திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினாலின் உடலுக்கு மரியாதை செலுத்தி, இறுதிச் செபம் சொல்லுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்தினால் கஸ்த்ரில்யோன் ஹோயோஸ் அவர்களின் இறப்போடு, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 213 ஆகவும், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய கர்தினால்களின் எண்ணிக்கை 115 ஆகவும் மாறியுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.