2018-05-18 15:29:00

திருத்தந்தை, பெனின் அரசுத்தலைவர் சந்திப்பு


மே,18,2018. பெனின் நாட்டு அரசுத்தலைவர் Patrice Talon அவர்கள், இவ்வெள்ளிக்கிழமை காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வத்திக்கானில் சந்தித்து கலந்துரையாடினார்.

திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் ஆகிய இருவரையும் சந்தித்துப் பேசினார், பெனின் அரசுத்தலைவர் Patrice Talon.

திருப்பீடத்திற்கும், பெனின் நாட்டுக்கும் இடையே தொடர்ந்து நிலவும் நல்லுறவுகள், குறிப்பாக, 2016ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று, Cotonouவில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் முறை, பெனின் நாட்டில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் மக்கள்நலப் பணிகள், சிறப்பாக, கல்வி, நலவாழ்வு, மக்கள் முன்னேற்றம்  போன்றவற்றில் ஆற்றிவரும் பணிகள் போன்றவை இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்தது.

மேலும், பெனின் நாட்டின் சமூக-பொருளாதார சூழல், குறிப்பாக, முன்னேற்றம், ஏழ்மையை அகற்றும் நடவடிக்கை, நாட்டில் இடம்பெறும் சீர்திருத்தம், பல்சமய உரையாடல் போன்ற தலைப்புகளும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையின் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களும், ஜெர்மனியின் கொலோன் பேராயர் கர்தினால் Rainer Maria Woelki அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்து கலந்துரையாடினர்.

"நம்மில் ஒருவர்" எனப்படும், ஐரோப்பிய கூட்டமைப்பின் மனித வாழ்வு மற்றும் மாண்பு ஆலோசனை அவையின் 16 உறுப்பினர்களையும் இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்து கலந்துரையாடினர், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.