2018-05-17 16:21:00

பொருளாதார-நிதிநிலை துறைகளின் நன்னெறிமுறை – திருப்பீடம்


மே.17,2018. பொருளாதாரம் மற்றும் நிதிநிலை தொடர்பான விடயங்கள், முன்னெப்போதும் இல்லாத அளவு, மனித சமுதாயத்தை ஆட்கொண்டு வருவதைக் காண முடிகிறது என்று, திருப்பீடத்தின் அறிக்கையொன்று கூறுகிறது.

"பொருளாதார மற்றும் நிதிநிலை விடயங்கள்: இன்றைய பொருளாதார-நிதிநிலை துறைகளின் நன்னெறிமுறை தேர்ந்து தெளிதலின் சில அம்சங்கள்" என்ற தலைப்பில், மே 17, இவ்வியாழன் காலை, திருப்பீடம், அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

விசுவாசக் கோட்பாட்டு பேராயமும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையும் இணைந்து உருவாக்கியுள்ள இவ்வறிக்கை, இவ்வியாழன் மதியம் செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

முன்னுரை, அடிப்படையான பரிசீலனைகள், இன்றையச் சூழலுக்கேற்ற சில தெளிவுகள், முடிவுரை என்ற நான்கு பிரிவுகளாக உருவாக்கப்பட்டுள்ள இவ்வறிக்கையில், 34 சிறு பகுதிகள் அடங்கியுள்ளன.

இவற்றில், 'இன்றையச் சூழலுக்கேற்ற சில தெளிவுகள்' என்ற பிரிவு, நீளமானதாக, 16 சிறு பகுதிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.

இன்றையச் சூழலில், பொருளாதாரமும், நிதிநிலையும் எவ்வாறு நன்னெறியின் அடிப்படையில் அமையவேண்டும் என்பது, இப்பிரிவில் ஆழமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் தலைவர், பேராயர் லூயிஸ் லதாரியா அவர்களும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்களும் இந்த வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இத்தாலியம், பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன், இஸ்பானியம் மற்றும் போர்த்துகீசியம் ஆகிய ஆறு மொழிகளில், இவ்வறிக்கை செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.