2018-05-17 15:42:00

புறணி பேசுவது, உண்மையான ஒன்றிப்பைக் கொலை செய்கிறது


மே.17,2018. உண்மையான ஒன்றிப்பு, போலியான ஒன்றிப்பு ஆகிய இரு பாதைகள் உள்ளன என்றும், இவற்றில், உண்மையான ஒன்றிப்பில் நாம் வளர்வதையே இயேசு விரும்புகிறார் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை வழங்கிய மறையுரையில் கூறினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, இன்றைய முதல் வாசகம் உணர்த்தும் போலியான ஒன்றிப்பையும், நற்செய்தி கூறும் உண்மையான ஒன்றிப்பையும் ஒப்புமைப்படுத்தி தன் மறையுரை கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

தான் தந்தையோடு கொண்டிருக்கும் ஒன்றிப்பில், நம்மையும் இணைக்க விரும்பும் இயேசு, அத்தகைய ஒன்றிப்பு திருஅவையில் நிலவவேண்டும் என்று இறுதி இரவுணவின்போது, செபித்ததை, திருத்தந்தை தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

இந்த உண்மை ஒன்றிப்புக்கு நேர் எதிராக, திருத்தூதர் பணிகள் நூலில், சதுசேயர்களுக்கும், பரிசேயர்களுக்கும் இடையே நிலவிய போலியான ஒன்றிப்பு கூறப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

பவுல் மீது குற்றம் சுமத்தவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, சதுசேயர்களும், பரிசேயர்களும் கொண்டிருந்த போலியான ஒன்றிப்பை, பவுல் எவ்விதம் உடைத்தார் என்பதை இன்றைய முதல் வாசகம் வெளிச்சத்திற்குக் கொணர்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

பவுல் அடியாருக்கு எதிராக எழுந்த பல எதிர்ப்புக்களில், காரணத்தை அறியாமலேயே மக்கள் கூடிவந்து கோஷம் எழுப்புவதையும் திருத்தூதர் பணிகள் நூலில், அடிக்கடி காண்கிறோம் என்று கூறியத் திருத்தந்தை, இயேசு எருசலேம் நகரில் நுழைந்தபோது, ‘ஓசான்னா’ என்று கோஷமிட்டவர்கள், ஒரு சில நாட்களில், சுயநலம் மிகுந்த மதத் தலைவர்களால் தூண்டப்பட்டு, 'சிலுவையில் அறையும்' என்றும் கோஷமிட்டனர் என்று கூறினார்.

காரணம் ஏதுமின்றி மற்றவர்கள் மீது குறைகாணும் ஒரே நோக்கத்துடன் புறணி பேசுவது, உண்மையான ஒன்றிப்பைக் கொலை செய்வதற்கு எளிய வழி என்பதையும் திருத்தந்தை தன் மறையுரையின் இறுதியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.