2018-05-17 16:18:00

பன்னாட்டுத் தூதர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை


மே.17,2018. பன்னாட்டளவில் தூதரகத் தொடர்புகளை மேற்கொள்வது, பொறுமை நிறைந்த பணி என்றும், இப்பணியின் வழியே, நீதி, நல்லிணக்கம், மனிதர்களுக்கு வழங்கப்படவேண்டிய மாண்பு ஆகியவை உறுதி செய்யப்படுகின்றன என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை, தன்னைச் சந்திக்க வந்திருந்த பன்னாட்டுத் தூதர்களிடம் கூறினார்.

டான்சானியா, லெசோதோ, பாகிஸ்தான், மங்கோலியா, டென்மார்க், எத்தியோப்பியா, மற்றும் பின்லாந்து ஆகிய ஏழு நாடுகளின் தூதர்களாக, திருப்பீடத்தில் பணியாற்ற வந்திருக்கும் அதிகாரிகளின் நற்சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட திருத்தந்தை, அவர்களுக்கு வழங்கிய குறுகிய உரையில் இவ்வாறு கூறினார்.

ஐ.நா. அவையில் மனித உரிமைகள் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதன் எழுபதாம் ஆண்டு நிறைவு, இவ்வாண்டு சிறப்பிக்கப்படுவதை தன் உரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை, பல்வேறு தேவைகளால் துன்புறுவோர் மீது தனிக்கவனம் செலுத்துவதற்கு, இத்தருணம் நம்மை உந்தித் தள்ளுகிறது என்று எடுத்துரைத்தார்.

"உலகமயமாக்கப்பட்டுள்ள அக்கறையின்மை" என்ற குறையை நாம் கண்டுகொள்ளாமல் இருக்க இயலாது என்பதை சிறப்பாக சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, அநீதிகள் பெருகும் வேளையில், நம் பார்வைகளை வேறுபக்கம் திருப்பிக்கொள்வது, இன்றைய உலகில் பரவியுள்ள நோய் என்று கூறினார்.

அரசுகளின் அடக்குமுறைகள், சமுதாயப் பாகுபாடுகள் ஆகிய கொடுமைகளால் தங்கள் சொந்த வீடுகளையும் நாடுகளையும் விட்டு தப்பியோடும் மக்களின் அவலநிலை, இன்றைய உலகில் பெரும் மனிதாபிமான நெருக்கடியாக வளர்ந்துள்ளது என்று கூறியத் திருத்தந்தை, பன்னாட்டுத் தூதர்கள், இந்த அவலநிலைக்கு தகுந்த தீர்வுகளை அரசுக்கு உணர்த்த கடமைப்பட்டுள்ளனர் என்று கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.