2018-05-16 15:12:00

உரையாடலும், கூட்டுறவும் மிக அவசியமான தேவைகள்


மே,16,2018. கிறிஸ்தவம், இந்து, புத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்களைச் சார்ந்த பிரதிநிதிகள், இணைந்து வந்து, உரோம் நகரில் மேற்கொண்ட ஒரு முயற்சியை தான் பாராட்டுவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த பல்சமயத் தலைவர்களிடம் கூறினார்.

"தர்மமும் வார்த்தையும் - சிக்கல் நிறைந்த காலத்தில் கூட்டுறவும், உரையாடலும்" என்ற தலைப்பில், உரோம் நகரில் நடைபெற்ற ஒரு பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்ட பிரதிநிதிகளை, மே 16, இப்புதன் காலை, சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்தத் திருத்தந்தை அவர்கள், இக்கருத்தரங்கு நடைபெற முயற்சிகள் மேற்கொண்ட அனைவரையும் பாராட்டினார்.

எதிர்பாராத வழிகளிலும், எதிர்பாராத அளவிலும், உலகெங்கும் மோதல்களும், இறுக்கமான சூழல்களும் உருவாகியுள்ள இன்றைய காலக்கட்டத்தில், உரையாடலும், கூட்டுறவும் மிக அவசியமான தேவைகளாக உள்ளன என்று திருத்தந்தை இக்குழுவினரிடம் எடுத்துரைத்தார்.

சிறு சிறு காரணங்களுக்காகவும், காரணங்கள் ஏதுமின்றியும் வன்முறைகள் நிகழும் நம் உலகில், மதத்தலைவர்கள், சந்திப்புக் கலாச்சாரத்தையும், உரையாடலையும் வளர்க்க பாடுபடவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த பன்னாட்டுக் குழுவிடம் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.