2018-05-15 15:07:00

விவிலியத்தேடல் : புதுமைகள் – 38 ஆண்டு வேதனையின் முடிவு - 3


பெத்சதா குளத்தருகே, ஆதரவு ஏதுமின்றி, 38 ஆண்டுகள் படுத்துக்கிடந்த நோயாளி, அவரது இறந்த காலத்திலிருந்து வெளியேறி, எதிர்காலத்தை புத்துணர்வுடன் துவங்கவேண்டும் என்ற விருப்பத்தில், இயேசு அவரிடம், "நலம்பெற விரும்புகிறீரா?" (யோவான் 5:6) என்று கேட்கிறார். இக்கேள்வி வழியே, எதிர்காலம் நோக்கி, இயேசு அவரை அழைக்கையில், அவரோ, மீண்டும், தனக்கு உதவிசெய்ய யாரும் இல்லை என்ற புலம்பலுடன், தான் வாழ்ந்துவந்த கடந்த காலத்திற்கே திரும்புகிறார்.

சிரிக்கவும், சிந்திக்கவும் உருவாக்கப்பட்ட 'Peanuts' என்ற தொடரில், கடந்த காலத்தையே பார்க்க விழைவது, எதிர்காலத்தைப் பார்க்கத் துணிவது என்ற இரு கண்ணோட்டங்களை ஒப்பிட்டு, ஒரு நிகழ்வு கூறப்பட்டுள்ளது.

Charles Shultz என்பவர் உருவாக்கிய இத்தொடரில், சார்லி என்ற சிறுவனும், லூசி என்ற சிறுமியும் கதாப்பாத்திரங்கள். ஒருநாள், லூசி, சார்லியிடம், "கப்பலின் மேல்தளத்தில் போடப்பட்டுள்ள சாய்வு நாற்காலிகளைப் போல் வாழ்வு அமைந்துள்ளது" என்று சொல்கிறாள். ஒன்றும் புரியாமல், சார்லி, லூசியிடம், "ஏன் அப்படி சொல்கிறாய்?" என்று கேட்கிறான். லூசி விளக்கம் அளிக்கிறாள்: "கப்பலின் மேல் தளத்தில் பயன்படுத்தப்படும் சாய்வு நாற்காலிகளை நினைத்துப் பார். ஒரு சிலர், அந்த நாற்காலிகளை, கப்பல் செல்லும் திசையை நோக்கி, தளத்தின் முன்புறம் போட்டு, தாங்கள் எங்கே போகிறோம் என்பதை அறிய ஆவல் கொண்டிருப்பர். வேறு சிலரோ, அந்த நாற்காலிகளை, கப்பலின் மேல்தளத்தில், பின்புறமாகப் போட்டு, அதுவரை தாங்கள் கடந்துவந்த பாதையைப் பார்த்தபடியே அமர்ந்திருப்பர்" என்று விளக்கம் அளிக்கிறாள் லூசி.

பெத்சதா குளத்தருகே படுத்திருந்த நோயாளி, கடந்து வந்த 38 ஆண்டுகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்ததால், "நலம்பெற விரும்புகிறீரா?" என்ற கேள்வி வழியே இயேசு அவருக்குக் கொணர விழைந்த எதிர்காலத்தை, நம்பிக்கையை, அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. குளத்து நீர் கலங்குவதும், அவ்வேளையில், தான் குளத்திற்குள் இறங்கமுடியாமல் போவதும் மட்டுமே அவரது சிந்தனை முழுவதையும் ஆக்ரமித்திருந்ததால், "ஐயா, தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை" (யோவான் 5:7) என்று பதில் சொல்கிறார். ஒருவேளை, அடுத்தமுறை அந்தக் குளத்து நீர் கலங்கும்போது, அறிமுகமற்ற இந்த இளைஞர், தன்னை நீரில் இறக்கிவிடுவார் என்ற நம்பிக்கையில், நோயாளி, அவ்வாறு கூறியிருக்கக்கூடும்.

வானதூதரால் கலக்கிவிடப்படும் குளத்து நீர் மட்டுமே தனக்கு நலம் கொணரமுடியும் என்று எண்ணிக்கொண்டிருந்த அவரிடம், "எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்" (யோவான் 5:8) என்று இயேசு கூறினார். அவ்வேளையில், நோயாளியின் உள்ளத்தில் ஒரு போராட்டம் நிகழ்ந்திருக்க வேண்டும். எழுந்து நடக்கச் சொல்லும் இந்த இளையவரை நம்புவதா, அல்லது, அவர் ஏதோ விளையாட்டாகச் சொல்கிறார் என்றெண்ணி, அதை அசட்டை செய்துவிட்டு, அடுத்த முறை நீர் கலங்கும் தருணத்திற்காகக் காத்திருப்பதா என்ற போராட்டம் அது.

அந்தப் போராட்டம், அதிக நேரம் நீடிக்காதவண்ணம், அவரை இயேசு உடனடியாகக் குணமாக்கினார். இதையே, இந்த புதுமையின் இறுதி வாக்கியம் இவ்வாறு கூறுகிறது. "உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்தார்" (யோவான் 5:9) என்று, இப்புதுமையின் முதல் பகுதி முடிவடைகிறது.

இதைத் தொடர்ந்து, அங்கு நிகழ்ந்ததை, நற்செய்தியாளர் யோவான், இவ்வாறு பதிவு செய்துள்ளார்:

யோவான் 5 10-16

அன்று ஓய்வு நாள். யூதர்கள் குணமடைந்தவரிடம், "ஓய்வு நாளாகிய இன்று படுக்கையை எடுத்துச் செல்வது சட்டத்திற்கு எதிரான செயல்" என்றார்கள். அவர் மறுமொழியாக "என்னை நலமாக்கியவரே, "உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துசெல்லும்" என்று என்னிடம் கூறினார்" என்றார். "படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்" என்று உம்மிடம் கூறியவர் யார்?" என்று அவர்கள் கேட்டார்கள். ஆனால் நலமடைந்தவருக்கு அவர் யாரெனத் தெரியவில்லை. ஏனெனில் அவ்விடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்ததால் இயேசு அங்கிருந்து நழுவிப் போய் விட்டார்.

பின்னர் இயேசு நலமடைந்தவரைக் கோவிலில் கண்டு, "இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்" என்றார். அவர் போய், தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தார். ஓய்வுநாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள்.

பெத்சதா குளத்தைச் சுற்றியிருந்த மண்டபங்களில், 38 ஆண்டுகளாக அடைபட்டுக்கிடந்த மனிதர், தன் படுக்கையை எடுத்துக்கொண்டு வெளி உலகில் அடியெடுத்து வைத்தார். தனக்கு நிகழ்ந்த அற்புதத்தை, அதிசயத்தை ஒவ்வொருவரிடமும் சொல்லவேண்டும் என்று அவர் எண்ணியிருக்கலாம். ஆனால், அவரைச் சந்தித்த யூதர்களுக்கு முதலில் கண்ணில் பட்டது, அவர் படுக்கையைச் சுமந்து சென்ற குற்றம். அவர்களில் ஒருசிலர், அந்தக் குளத்தினருகே அவர் படுத்துக்கிடந்ததைப் பார்த்திருக்கக்கூடும். அவர், படுக்கையைச் சுமந்து, நடந்து வந்ததைக் கண்ட அவர்கள், ஒருவேளை, குளத்தில் ஆண்டவரின் தூதர் நீரைக் கலக்கிய வேளையில் அவர் இறங்கியிருக்கக் கூடும் என்று நினைத்திருக்கலாம். அப்படியே நேர்ந்திருந்தாலும், அவர் குணமடைந்ததை எண்ணி அவர்களும் மகிழ்ந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் கவனத்தை முதலில் ஈர்த்தது,  அவர் குணம் அடைந்த அற்புதம் அல்ல, மாறாக, அவர் படுக்கையைச் சுமந்து சென்றார் என்ற குற்றம் மட்டுமே. உடனே அவர்கள் தங்கள் கண்டனத்தை வெளியிடுகின்றனர்: "ஓய்வு நாளாகிய இன்று படுக்கையை எடுத்துச் செல்வது சட்டத்திற்கு எதிரான செயல்"

38 ஆண்டுகளாக குளத்தருகே படுத்துக்கிடந்தவருக்கு, ஒய்வு நாளும், மற்ற நாள்களும் ஒன்றுபோலவே இருந்திருக்கும். எனவே, அவர்கள் கூறியதை அவர் பெரிதுபடுத்தாமல், தன்னை குணமாக்கியவர், படுக்கையை எடுத்துக்கொண்டு போகச் சொன்னதால், தான் அவ்வாறு செய்வதாகக் கூறினார்.

உடனே, அங்கு ஒரு வழக்கு ஆரம்பமாகிறது. ஓய்வுநாளை மீறும்படி கட்டளை கொடுத்தவர் யார் என்ற கேள்வி எழுகிறது. படுக்கையைச் சுமந்து வந்தவருக்கு தன்னைக் குணமாக்கியது யார் என்று கூட தெரியாமல் போனது. அதுதான், இயேசுவின் அழகு. நல்லது ஒன்று நடந்ததும், அவ்விடத்தைவிட்டு மறைந்துவிடுவது, அவரது வழக்கம். பல வேளைகளில், நிகழ்ந்த புதுமையைப்பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்ற கட்டளையையும் இயேசு வழங்கியுள்ளதை, நாம் நற்செய்திகளில் காண்கிறோம்.

இதன்பின், குணமடைந்தவர், தான் நலமடைந்ததற்காக, இறைவனுக்கு நன்றிப்பலி செலுத்த கோவிலுக்குச் சென்றிருக்கவேண்டும். அங்கு, அவர், இயேசுவைச் சந்திக்கிறார். அவர் தொடர்ந்து நலமுடன் வாழவிரும்பினால், பாவம் செய்யக்கூடாது என்ற அறிவுரையை இயேசு வழங்குகிறார். கோவிலில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததால், குணமடைந்த மனிதர், இயேசுவைச் சூழ்ந்திருந்த மக்களில் ஒருவரிடம் அவரைப்பற்றி இன்னும் அதிகமாக கேட்டறிந்திருப்பார்.

இங்கு, நற்செய்தியாளர் யோவான் கூறியுள்ள சொற்கள், நம்மை சிறிது அதிர்ச்சியடையச் செய்கின்றன. குணமானவரை நோக்கி, "இனி பாவம் செய்யாதீர்" என்று இயேசு சொல்லி அனுப்பியதும், "அவர் போய், தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தார்" (யோவான் 5:15) என்று யோவான் கூறியிருப்பது, நமக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. இது, ஏறத்தாழ இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்குச் சமம். தன்னுடைய நெருங்கிய சீடர்களில் ஒருவரால் இயேசு காட்டிக்கொடுக்கப்படுவதற்கு, ஓர் ஒத்திகை போல, இயேசுவால் நன்மை பெற்ற ஒருவர், அவரை யூதர்களிடம் அடையாளப் படுத்துகிறார்.

ஓய்வுநாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள். என்று யோவான் தெளிவாகக் கூறியுள்ளார். இன்னும் சில இறைவாக்கியங்களுக்குப் பின், யூதர்கள் அவரைக் கொல்ல இன்னும் மிகுந்த முயற்சி செய்தார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

மக்களுக்கு நல்லவை நிகழும்போது, அந்த நன்மையால் உள்ளம் மகிழ்வதற்குப் பதில், என்ன குறை கண்டுபிடிக்கலாம் என்று காத்திருப்போர், எதிலும் குறை காண்பதிலேயே குறியாய் இருப்பர். தாங்களும் நன்மை செய்வது கிடையாது, செய்பவர்களையும் அமைதியாய் விடுவது கிடையாது.

தமிழ்நாட்டின் உத்திரமேரூருக்கு அருகில், பாலேஸ்வரத்தில் இயங்கிவரும் புனித ஜோசப் கருணை இல்லத்தைப்பற்றி தவறான, தாறுமாறானச் செய்திகள் இவ்வாண்டு மார்ச் மாதம் பல ஊடகங்களில் உலவி வந்தன. முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில் தெருவோரங்களில் இறந்துகொண்டிருக்கும் மக்கள், நல்லதொரு முறையில் மரணமடைய உதவிகள் செய்துவரும் இவ்வில்லத்தைக் குறித்து பொய்யானச் செய்திகள் பரவின. இந்த இல்லத்தை நடத்திவரும் அருள்பணி தாமஸ் அவர்கள், இந்தப் பிரச்சனையைக் குறித்துப் பேசுகையில், அவர் கூறிய ஒரு நிகழ்வு, இயேசுவின் மீது குறை கண்டுபிடித்த யூதர்களை நினைவுறுத்துகிறது.

அருள்பணி தாமஸ் அவர்களை இந்து அடிப்படைவாதக் குழுவைச் சேர்ந்த ஒருவர் சந்தித்தபோது, "நீங்கள் எதற்காக இதுபோன்ற செயல்களைச் செய்கிறீர்கள்? ஒருவர் உடலெல்லாம் புழுத்து, நாற்றமெடுத்து நடுத்தெருவில் கிடந்தால், அது அவருடைய விதி. அதுதான் இந்து மதத்தின் கர்மா. அவர்கள் அப்படித்தான் சாகவேண்டும் என்று அவர்கள் தலையில் எழுதப்பட்ட எழுத்து. அவர்கள் தலையெழுத்தை மாற்ற நீங்கள் முயற்சி செய்தால், அதில் உங்களுக்கு ஏதோ ஆதாயம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்" என்று அவர் பேசியிருக்கிறார்.

38 ஆண்டுகளாக நோயுற்று கிடந்தவருக்கு எவ்வழியிலும் உதவிகள் செய்யாத யூதர்கள், அவர் நலமடைந்து படுக்கையை எடுத்துச் செல்கிறார் என்றதும், அவர் வாழ்வில் குறுக்கிடுகின்றனர். அவருக்கு நலமளித்த இயேசுவின் மீதும் குற்றம் காண்கின்றனர். அவர்களது வெறுப்பு, இயேசுவைக் கொல்லும் அளவுக்கு வளர்ந்துவிடுகிறது.

இவை எதுவும், இயேசுவை எவ்வகையிலும் பாதிக்கவில்லை. அவர் தொடர்ந்து நன்மைகள் செய்துவந்தார் என்பதை, இயேசுவின் அடுத்த புதுமை நமக்கு உணர்த்துகிறது. இயேசு 5000த்திற்கும் அதிகமான மக்களுக்கு அப்பத்தைப் பகிர்ந்தளித்த புதுமையில் நாம் அடுத்தவாரம் அடியெடுத்து வைப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.