2018-05-15 15:51:00

ஆழ்தியானச் சபை அருள்சகோதரிகளுக்கு புதிய நடைமுறைகள்


மே,15,2018. ஆழ்தியானச் சபை அருள்சகோதரிகள், சமூக ஊடகங்களை, சமநிலை மற்றும் விவேகத்துடன் பயன்படுத்தலாம், அவ்வாறு பயன்படுத்தவில்லையென்றால், அவை, சத்தம், செய்திகள், தகவல்கள் போன்றவை நிறைந்து, ஆழ்தியான வாழ்வின் அமைதிக்கு ஆபத்தாக அமையும் என்று, திருப்பீட துறவியர் பேராயம், இச்செவ்வாயன்று வெளியிட்ட புதிய அறிவுரை நடைமுறை தொகுப்பு கூறுகின்றது.

"Vultum Dei quaerere"அதாவது, "கடவுளின் திருமுகத்தைத் தேடுதல்" என்ற தலைப்பில், ஆழ்தியானச் சபை அருள்சகோதரிகளுக்கென, 2016ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கையெழுத்திட்டு, அதே ஆண்டு ஜூலை 22ம் தேதி துறவியர் பேராயம் வெளியிட்ட திருத்தூது கொள்கை விளக்கத்திற்கு, நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.   

'Cor Orans' என்ற தலைப்பில், திருப்பீட துறவியர் பேராயம் வெளியிட்டுள்ள நடைமுறைகளை, அப்பேராயத்தின் செயலர் பேராயர் ஹோசே ரொட்ரிகெஸ் கர்பாலோ (José Rodríguez Carballo) அவர்கள் தலைமையிலான குழு, இச்செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டது.

நான்கு சுவர்களுக்குள் அடைப்பட்ட வாழ்வு வாழ்கின்ற ஆழ்தியானச் சபை அருள்சகோதரிகள் பயன்படுத்தும் சமூக ஊடகங்கள், தகவல், பயிற்சி மற்றும் வேலைக்கு உதவுவதாய் இருக்க வேண்டும் என்றும், எத்தகைய ஊடகங்களை, எவ்வளவு தூரம் பயன்படுத்த வேண்டுமென்பதில் விவேகத்துடன் செயல்படுமாறும் இப்புதிய நடைமுறை கேட்டுக்கொண்டுள்ளது.

பொது விதிமுறைகள், ஆழ்தியான துறவு இல்ல தன்னாட்சி, புதிய இல்லங்கள் ஆரம்பித்தல், பிற இல்லங்களோடு தொடர்பு, இல்லத்தின் இடமாற்றம், இல்லத்தை மூடுதல், இத்துறவு இல்லங்களின் கூட்டமைப்பு, அதன் தலைவர், அதன் ஆலோசனை அவை, இச்சபையினர் உலகை விட்டுப் பிரிந்து இருத்தல், திருத்தந்தையின் ஆழ்தியான சபை இல்லம், பயிற்சிகள், சபையில் சேருபவர், தொடக்க நிலையினர், புகுமுக துறவியர், இளநிலையினர், சமூக ஊடகங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில், நடைமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.  

ஆழ்தியானச் சபை அருள்சகோதரிகளுக்கென, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், 1950ம் ஆண்டு நவம்பரில் வெளியிட்ட 'Sponsa Christi Ecclesia' என்ற திருத்தூது கொள்கை விளக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "Vultum Dei quaerere" என்ற தனது கொள்கை விளக்கத்தில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை என்றும், இதில் ஒருசில குறிப்புகள் கொடுத்திருக்கின்றார் என்றும் செய்தியாளர் கூட்டத்தில் கூறப்பட்டது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.