2018-05-15 15:43:00

சிறார்க்கு எதிரான எல்லா வன்முறைகளும் நிறுத்தப்பட...


மே,15,2018. சிறார்க்கு எதிரான அனைத்துவிதமான வன்முறைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது என்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ஐ.நா. கூட்டமொன்றிற்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறியுள்ளார்.

ஆஸ்ட்ரியாவின் தலைநகர் வியன்னாவில், குற்றங்களைத் தடை செய்தல் மற்றும் குற்றவியல் நீதி குறித்த ஐ.நா. அவை, இத்திங்களன்று தொடங்கியுள்ள 27வது ஆண்டுக் கூட்டத்திற்குச் செய்தி அனுப்பியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், இணையதள குற்றம் குறித்த இக்கூட்டத்தின் தலைப்பை மையப்படுத்தி வழங்கியுள்ளார்.

இணையதள குற்ற விவகாரம் பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ளார் என்றும், இக்குற்றங்களை ஒழிப்பதில், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், பெருமளவு பயன்களை எட்டியிருந்தாலும், இத்தகைய குற்றச்செயல்களின் புதிய வடிவங்களும், புதிய மற்றும் மிகவும் சக்திமிக்க வகையில் பழைய வடிவங்களும் நடத்தப்படுவது அதிகரித்து வருகின்றன என்றும் கர்தினாலின் செய்தி கூறுகின்றது.

ஐ.நா.வின் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் நிறைவேற்றப்படவேண்டுமெனில்,  மனிதக் குடும்பத்தின் வருங்காலமாகிய சிறார் மீது அக்கறை செலுத்தப்பட வேண்டுமென்பதில் திருத்தந்தை உறுதியாய் இருக்கின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார், கர்தினால் பரோலின்.

இவ்விவகாரத்தில், பொதுமக்களின் மனச்சான்றுகளை வடிவமைப்பதிலும், அவற்றைத் தட்டியெழுப்புவதிலும் திருப்பீடமும், கத்தோலிக்க திருஅவையும் அக்கறையுடன் உள்ளது என்றும் கூறியுள்ள, கர்தினால் பரோலின் அவர்கள், இக்கூட்டத்திற்கு திருத்தந்தையின் வாழ்த்துக்களையும், செபங்களையும் தெரிவித்துள்ளார்.

மே 14, இத்திங்களன்று தொடங்கியுள்ள இந்த 27வது ஆண்டுக் கூட்டம், மே 18, வருகிற வெள்ளிக்கிழமையன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.