2018-05-12 15:20:00

விசுவாசம் மற்றும் பிறரன்பு வழியாக சான்று பகர்தல்


மே.12,2018. ஏழைகளுக்கு உதவி வரும் தங்கள் பணியை இன்னும் கூடுதலாக, எவ்வித தடையுமின்றி தொடர்ந்திட வேண்டும் என 'தூய பேதுருவின் வட்டம்' என்றதோர் அமைப்பினரிடம் விண்ணப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Circolo San Pietro, அதாவது, தூய பேதுருவின் வட்டம் என்ற பெயரில் கடந்த பல ஆண்டுகளாக பிறரன்பு பணிகளை ஏற்று நடத்திவரும் இக்குழுவினர், இச்சனிக்கிழமை காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது, இவ்விண்ணப்பத்தை முன்வைத்த திருத்தந்தை, உரோம் நகரில் வாழும் வறியோரின் குரலுக்கு செவிசாய்த்து, அவர்களோடு, உரையாடி, அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிவரும் இந்த அமைப்பின், செவிமடுத்தல், பகிர்தல், நெருக்கமாயிருத்தல், ஒருமைப்பாட்டை செயல்படுத்துதல் என்ற பாதை தொடரப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மற்றவர்களின் துன்பங்களிலும், காயங்களிலும் இயேசுவைக் கண்டு, இறை இரக்கம் மற்றும் நன்மைத்தனத்தின் சான்றுகளாக ஒவ்வொருவரும் விளங்கவேண்டும் என்ற அழைப்பையும் இக்குழுவினருக்கு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

நம் விசுவாச மற்றும் பிறரன்பு வாழ்வின் வழியாக இயேசுவுக்கு சான்றுகளாக இருக்கும் நாம், திருமுழுக்கில் பெற்ற அருளை நம் புனிதப் பயணத்தில், பிறரன்பு நடவடிக்கைகள் வழியாக, கனி தரும் கொடைகளாக மாற்றுகின்றோம் என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.