2018-05-12 16:13:00

வாழ்வு மாண்பு குறித்த மதங்களின் கண்ணோட்டங்கள்


மே.12,2018. ஜோர்டன் நாட்டில் பல்சமய ஆய்வுகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள அரசு நிறுவனத்திற்கும், பல்சமய கலந்துரையாடல் திருப்பீட அவைக்கும் இடையே ஜோர்டனின் அம்மானில் அண்மையில் இடம்பெற்ற ஐந்தாவது கூட்டம் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

‘மதங்களும் வாழ்வின் மாண்பும்: கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய கண்ணோட்டங்கள்' என்ற தலைப்பில் இடம்பெற்ற இரண்டு நாள் கலந்துரையாடலில், முதலில் இவ்விரு கண்ணோட்டங்களில் நிலவும் சவால்கள் குறித்தும், இரண்டாவது, கலந்துரையாடல் வழங்கும் வாய்ப்புகள் குறித்தும், மூன்றாவது, 'அதன் ஏனைய கோணங்கள்' என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டன.

இறைவனின் கொடையான வாழ்வு என்பது, அதன் துவக்கம் முதல், இயற்கையான முடிவு வரை பாதுகாக்கப்பட வேண்டும், ஒவ்வொரு மனிதனின் மாண்பும் உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும்,  ஏனெனில் உரிமைகளும் மாண்பும் மதிக்கப்படுவது நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகிறது எனவும் பரிந்துரைகள் இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

மேலும், குடியேற்றதாரர், புலம்பெயர்ந்தோர் ஆகியோர் மதிக்கப்படுதல், இளைய தலைமுறைக்கு நல்ல கல்வி வழங்குதல் போன்ற பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டு, இருதரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஒவ்வொரு தரப்பிலிருந்தும், 12 பிரதிநிதிகளும் மூன்று பார்வையாளர்களும் இக்கூட்டத்தில் பங்குபெற்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.