2018-05-12 15:37:00

ஆண்டவரின் விண்ணேற்றம், அன்னை தினம் - ஞாயிறு சிந்தனை


மே 13, இந்த ஞாயிறு, முப்பெரும் விழாவைக் கொண்டாடுகிறோம். ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவைச் சிறப்பிக்கும் இந்த ஞாயிறு, மே 13ம் தேதி என்பதால், பாத்திமா நகரில் மரியன்னை காட்சி தந்தத் திருநாளும், இது, மே மாதம் இரண்டாம் ஞாயிறு என்பதால், அன்னை தினமும் கொண்டாடப்படுகின்றன. இம்மூன்று விழாக்களும், மனதை உயர்த்தும் அற்புத எண்ணங்களை நமக்கு வழங்குகின்றன.

முதலில், ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா நமக்கு வழங்கும் எண்ணங்களை அசைபோடுவோம். "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" (மாற்கு 16:15), என்று, இன்றைய நற்செய்தியில் இயேசு விடுத்த கட்டளையும், "உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்" (தி.பணிகள் 1:8) என்று இன்றைய முதல் வாசகத்தில் அவர் வழங்கிய உறுதி மொழியும், இவ்விழாவின் உயிர் நாடியாக விளங்கும் இரு கருத்துக்கள். நற்செய்தியைப் பறைசாற்றுவதும், கிறிஸ்துவுக்கு சாட்சியாக இருப்பதும், கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளம்.

ஒருவர், கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ்ந்துவந்தால், அவர் வாயைத் திறந்து நற்செய்தியை பறைசாற்றவும் தேவையில்லை. இந்த உண்மைக்கு தலைசிறந்த எடுத்துக்காட்டு, அசிசி நகர் புனித பிரான்சிஸ். ஒரு நாள், புனித பிரான்சிஸ், ஓர் இளம் துறவியை அழைத்து, "வாருங்கள் நாம் ஊருக்குள் சென்று போதித்துவிட்டு வருவோம்" என்று கூறி, உடன் அழைத்துச் சென்றார். போதிப்பதற்கு, பிரான்சிஸ், தன்னை அழைத்துச் செல்கிறார் என்று உணர்ந்த அந்த இளையவர், பெருமிதம் கலந்த மகிழ்வில் மிதந்தார். அன்று முழுவதும், அவ்விளையவரும், பிரான்சிஸும் ஊருக்குள் பிறரன்புப் பணிகள் பல செய்தனர். மாலையில் அவர்கள் வீடுதிரும்பிய வேளையில், இளையவர், தன் உள்ளத்தில் நிறைந்திருந்த ஏமாற்றத்தை வெளியிட்டார். "போதிப்பதற்காகத்தானே ஊருக்குள் சென்றோம். இப்போது போதிக்காமலேயே திரும்புகிறோமே!" என்று, தன் உள்ளக் குமுறலை வெளியிட்டார்.  "நாம் தேவையான அளவு இன்று போதித்து விட்டோம். நமது செயல்கள் வார்த்தைகளைவிட வலிமை மிக்கவை. தேவைப்படும்போது மட்டும் வார்த்தைகளை நாம் பயன்படுத்தவேண்டும்" என்று அந்த இளையவருக்கு புனித பிரான்சிஸ் தெளிவுபடுத்தினார்.

வாழ்வால் சாட்சி பகராமல், வார்த்தைகளைக் கொண்டு, நற்செய்தியைப் பறைசாற்றும் பெரிய திட்டங்களைச் செயல்படுத்த விழைவோருக்கு, சவால் விடுக்கும் வண்ணம் அமைந்துள்ள, ஒரு பாரம்பரியக் கதை இதோ:

இயேசு விண்ணேற்றம் அடைந்தபின் நிகழ்ந்ததாய்ச் சொல்லப்படும் கற்பனைக் கதை இது. இயேசு விண்ணகம் சென்றதும், தலைமைத்தூதர் கபிரியேல் அவரைச் சந்தித்தார். "உங்கள் பணியைத் திறம்பட முடித்துவிட்டீர்கள். உலகில் உங்கள் நற்செய்தியைத் தொடர்ந்து பரப்புவதற்கு என்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள்?" என்று கேட்டார்.

"என்னுடையப் பணியைத் தொடரும்படி ஒரு சில மீனவர்களிடமும், வரி வசூலிப்பவர்களிடமும் சொல்லியிருக்கிறேன்" என்று இயேசு சொன்னதும், கபிரியேல் தூதர் அவரிடம், "யார்... அந்தப் பேதுரு, தோமா, இவர்களைப்பற்றி சொல்கிறீர்களா? அவர்களைப் பற்றித்தான் உங்களுக்கு நன்கு தெரியுமே... ஒருவர் உங்களைத் தெரியாது என்று மறுதலித்தார், மற்றொருவர் உங்களை நம்பவில்லை. இவர்களை நம்பியா இந்த மாபெரும் பணியை ஒப்படைத்தீர்கள்? கட்டாயம் வேறு சில நல்ல திட்டங்கள் உங்கள் எண்ணத்தில் இருக்கும், அப்படித்தானே?" என்று கேட்டார்.

இயேசு அவரிடம் அமைதியாக, "நற்செய்திப் பரப்பும் பணியை, இவர்களை நம்பியே நான் ஒப்படைத்துள்ளேன். இவர்களைத்தவிர, என்னிடம் வேறு எந்தத் திட்டமும் கிடையாது" என்று பதிலளித்தார்.

இருபது நூற்றாண்டுகளைத் தாண்டி, நற்செய்தி, இன்றும், இவ்வுலகில் உயிரோடு வாழ்ந்துவருகிறது என்றால், இன்றும் அர்த்தம் உள்ளதாக இருக்கிறது என்றால், அதற்குக் காரணம், நற்செய்தியை, தங்கள் அறிவுத்திறன் கொண்டு, சொல்லாற்றல் கொண்டு போதித்தவர்களோ, அவர்கள் பயன்படுத்திய விளம்பர வழிகளோ அல்ல. மாறாக, நற்செய்தியும், அதன் மையமான இயேசுவும்தான் காரணம்.

இயேசுவுக்கும், அவரது நற்செய்திக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல், போதிப்பவரின் புகழுக்கும், அவர் பயன்படுத்தும் வார்த்தை வித்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட வேளைகளில், நற்செய்தி தடைபட்டது என்பதை, கிறிஸ்தவ வரலாறு, மீண்டும், மீண்டும், நமக்குச் சொல்லித்தருகிறது.

நற்செய்தியைப் பறைசாற்றவும், இயேசுவின் சாட்சிகளாய் இருக்கவும் நமக்கு அழைப்பு விடுக்கும் விண்ணேற்ற பெருவிழாவன்று, நற்செய்தியை தங்கள் வாழ்வாக்கிய அசிசி நகர் பிரான்சிஸ், அன்னை தெரேசா போன்ற புனிதர்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம். அவர்கள், தங்கள் வாழ்வால் போதித்த நற்செய்தியே, இவ்வுலகில் பெரும் மாற்றங்களை உருவாக்கியுள்ளன என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இன்றைய முப்பெரும் விழாவின் அடுத்த இரு திருநாள்கள், அன்னையரை மையப்படுத்தியவை. நற்செய்தியை தங்கள் வாழ்வின் வழியே பறைசாற்றியப் புனிதர்களின் வரிசையில், முதலிடம் பெறுபவர், அன்னை மரியா. அந்த அன்னையை மையப்படுத்தி கொண்டாடப்படும் பல திருநாள்களில் ஒன்று, மே 13ம் தேதி நாம் சிறப்பிக்கும், பாத்திமா அன்னை திருநாள். அந்த அன்னையின் பிம்பங்களாக, இவ்வுலகில் வலம்வரும் நமது அன்னையரையும், இன்று நன்றியோடு எண்ணிப் பார்க்க, மே மாதத்தின் 2ம் ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் அன்னை தினம் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

அன்னைக்கென வருடத்தின் ஒரு நாளை அர்ப்பணிக்கும் எண்ணத்தை 19ம் நூற்றாண்டில் வித்திட்டவர், சமூக ஆர்வலரும், கவிஞருமான Julia Ward Howe. இவர் 1870ம் ஆண்டு சக்திவாய்ந்த ஒரு கவிதையை எழுதினார். Mother's Day Proclamation, அதாவது, "அன்னைதின அதிகாரப்பூர்வ அறிவிப்பு"  என்ற பெயரில் அவர் வெளியிட்ட கவிதை, உலகெங்கும் அன்னை தினத்தைக் கொண்டாடும் எண்ணத்திற்கு வித்திட்டது. இக்கவிதை விவரிக்கும் தாய்மைப் பண்புகள் நமது இன்றைய உலகிற்கு மிகவும் தேவையான பாடங்களைச் சொல்லித் தருகின்றன. அன்னை, அல்லது, அம்மா என்றதும், வீட்டுக்குள், அடுப்படியில் முடங்கிக்கிடக்கும் பெண்ணாக, அவர்களை எண்ணிப்பார்த்த காலத்தைக் கடந்து, சமுதாயத்தில் நல்ல முடிவுகளை எடுக்க, குறிப்பாக, உலக அமைதியை முன்னிறுத்தி, முடிவுகள் எடுக்க, பெண்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும்; அவர்களது மென்மை கலந்த உறுதி, உலகின் பிரச்சனைகளைத் தீர்க்கும் என்று, 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இக்கவிதை முழங்குகிறது. அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் எழுதப்பட்ட அக்கவிதை இதோ:

மகளிரே, இன்று எழுந்து நில்லுங்கள்! இதயமுள்ள மகளிரே, எதிர்த்து நில்லுங்கள்!

உங்களது திருமுழுக்கு, தண்ணீரால் நடந்திருந்தாலும், கண்ணீரால் நடந்திருந்தாலும் சரி... இப்போது எழுந்து நில்லுங்கள், எதிர்த்து நில்லுங்கள்.

உறுதியாகச் சொல்லுங்கள்: “வாழ்வின் மிக முக்கியமானக் கேள்விகளுக்கு, விடைகளைத் தீர்மானிக்கும் உரிமையை, குடும்பத்துடன் சிறிதும் தொடர்பற்ற நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்.

சண்டைகளில், உயிர்களைக் கொன்று குவித்த கொலை நாற்றத்துடன் வீடு திரும்பும் கணவர்கள், எங்கள் ஆரவார வரவேற்பையும், அரவணைப்பையும் பெறுவதற்கு, நாங்கள் இணங்கமாட்டோம்.

பிறரன்பு, கருணை, பொறுமை என்று நாங்கள் சொல்லித்தரும் பாடங்களை மாற்றி, அவற்றிற்கு எதிரான பாடங்களைச் சொல்லித்தரும் நிறுவனங்களிடம் எங்கள் குழந்தைகளை ஒப்படைக்க மாட்டோம்.

ஒரு நாட்டைச் சார்ந்த பெண்களாகிய நாங்கள், மற்றொரு நாட்டைச் சார்ந்த பெண்கள் மீது கனிவு கொண்டவர்கள். எனவே, எங்கள் மகன்கள், அப்பெண்களின் மகன்களைக் காயப்படுத்த விடமாட்டோம்.”

அன்னையரின் ஒருமித்த தீர்மானங்களை, இவ்வாறு, தெளிவுடன் வெளியிடும் இவ்வறிக்கை, தொடர்ந்து, அமைதிக்காக ஏங்கி, ஒவ்வொரு நாளும் அலறும் பூமித்தாயுடன், அன்னையரின் குரல்களை இணைக்கிறது.

நிர்மூலமாக்கப்பட்ட இந்தப் பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் ஓர் ஓலம், எங்கள் குரல்களுடன் இணைகிறது. அது சொல்வது இதுதான்: "ஆயுதங்களைக் களையுங்கள்! ஆயுதங்களைக் களையுங்கள்! உயிர் குடிக்கும் வாள் ஒருநாளும் நீதியை நிலைநாட்டும் தராசு ஆகாது!" என்பதே, பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் அந்த ஓலம்.

போர்க்கள அழைப்பைக் கேட்டு, தங்கள் நிலங்களையும், தொழிற்சாலைகளையும் விட்டுச் சென்றுள்ள ஆண்களைப் போல், பெண்களும், தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறட்டும். போரில் ஈடுபடும் ஒவ்வொரு நாட்டிலும் நல்ல முடிவுகள் உருவாக, பெண்களும், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறட்டும். போரில் இறந்தோரை நினைவுகூர, அவர்களுக்காக அழுது புலம்ப, பெண்கள் ஒன்று சேரட்டும். இந்த மனிதக் குடும்பம் அமைதியில் வாழ்வதற்குரிய வழிமுறைகளை, பெண்கள் கலந்து பேசட்டும்.

உலகின்மேல், சீசரின் உருவத்தைப் பதிக்காமல், கடவுளின் உருவத்தைப் பதிப்பது எவ்விதம் என்பதை பெண்கள் இவ்வுலகிற்குச் சொல்லித் தரட்டும்.

Julia Ward அவர்கள் எழுதிய கவிதை, இன்றும் நம்மைச் சூழ்ந்துள்ள அவலங்களை, ஆபத்துக்களைக் கூறுகின்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, அண்மையில், இரு கொரிய நாடுகளின் அரசுத்தலைவர்கள் ஒருவரையொருவர் சந்தித்தது, ஓரளவு நம்பிக்கையை தந்துள்ளது. இருப்பினும், சிரியாவில் நிகழ்வதாய் சொல்லப்படும் வேதியல் போர், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல், உலகின் அனைத்து நாடுகளிலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்கள் போன்ற செய்திகள், நமது அமைதியையும், நம்பிக்கையையும் குலைக்கின்றன.

சண்டைகளில் உயிர்களைக் கொன்று குவித்த கொலை நாற்றத்துடன் வீடு திரும்பும் கணவர்கள் என்று, இக்கவிதையில் சித்திரிக்கப்பட்டுள்ள காட்சி, நமக்கு வேதனை தருகிறது. ஆனால், கொலை நாற்றத்துடன் வீடுதிரும்பும் ஆண்களின் எண்ணிக்கை, உலகில் பெருகிவருகிறது என்ற உண்மை, நம் வேதனையை ஆழப்படுத்துகிறது. கண்மூடித்தனமான வெறியுடன், தீவிரவாதக் குழுக்கள் உருவாக்கிவரும் கொலை நாற்றத்தைப் போக்க, அரசுகள் மேற்கொள்ளும் இராணுவ முயற்சிகள் தகுந்த பதில்தானா என்று தெரியவில்லை. பழிக்குப் பழி என்ற தீயை, மன்னிப்பு என்ற மழையே தணிக்கமுடியும். அப்போதுதான், இந்தக் கொலை நாற்றம் இவ்வுலகிலிருந்து நீங்கும். மன்னிப்பு மழையைச் சுமந்துவரும் கருணை மேகங்களாக இவ்வுலகில் வலம்வருவது, அன்னையரே என்பதை, யாரும் மறுக்கமுடியாது.

Julia Ward அவர்கள் எழுதிய கவிதையின் இறுதி வரிகள் இன்று நாம் கொண்டாடி மகிழும் அன்னை தினத்தையும், பாத்திமா அன்னை திருநாளையும் இணைக்க உதவியாக உள்ளன. உலகின்மேல், சீசரின் உருவத்தைப் பதிக்காமல், கடவுளின் உருவத்தைப் பதிப்பது எவ்விதம் என்பதை பெண்கள் இவ்வுலகிற்குச் சொல்லித் தரட்டும்.

உலகின் மேல் அதிகாரமான, ஆணவமான சீசரின் உருவம், பதியப் பதிய, மென்மேலும் போர்களாலும், வன்முறைகளாலும் இந்த உலகம் சிதைந்து வருகிறது என்பதை நன்கு அறிவோம். சீசரின் உருவைப் பதிப்பதற்குப் பதிலாக, அன்பான, ஆறுதலான கடவுளின் உருவைப் பதிப்பது எப்படி என்பதை, அன்னை மரியா, தான் வாழ்ந்த காலத்தில் மட்டும் சொல்லித் தரவில்லை. அவர் விண்ணகம் சென்றபின்பும், பல இடங்களில் தோன்றி, இந்தச் செய்தியைப் பகிர்ந்தார். சிறப்பாக, பாத்திமா நகரில் அவர் தோன்றியபோது, உலகைச் சூழ்ந்திருந்த போரைக் குறித்தும், உலக அமைதிக்காக மக்கள் செபங்களை எழுப்ப வேண்டும் என்பது குறித்தும், சிறப்பான செய்திகளைக் கூறினார். அன்னை மரியா கூறிய அச்செய்தி, பாத்திமா அன்னை திருநாளன்று, மீண்டும் ஓர் அழைப்பாக ஒலிக்கிறது.

பல்வேறு போர்களால், போராட்டங்களால் தொடர்ந்து காயப்பட்டு வரும் நமது உலகிற்கு, தாய்மை, பெண்மை ஆகிய குணமளிக்கும் குணங்கள் அதிகம் தேவைப்படுகின்றன. எனவே, இன்று நாம் கொண்டாடும் அன்னை தினம், வாழ்த்து அட்டைகள், மலர் கொத்துக்கள் என்று, வெறும் வியாபாரத் திருநாளாக மாறிவிடாமல், நம் ஒவ்வொருவரிலும் உள்ள தாய்மையை வெளிப்படுத்தும் ஒரு நாளாக, அதன் வழியாக, உலகின் அமைதிக்கு உறுதியான அடித்தளமிடும் ஒரு நாளாக இருக்க வேண்டுமென்று, சிறப்பாக வேண்டிக்கொள்வோம். அமைதியின் மன்னராம் கிறிஸ்துவுக்கு சாட்சிகளாக வாழ்வதன் வழியே, நாம் நற்செய்தியைப் பறைசாற்றுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.