2018-05-10 15:07:00

லோப்பியானோ நகரத்தினருக்கு திருத்தந்தை வழங்கிய உரை


மே.10,2018. நற்செய்தியிலிருந்து பிறந்த இந்நகருக்கு வருவதில் நான் பெரும் மகிழ்வு கொள்கிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை, இத்தாலியின் லோப்பியானோ (Loppiano) என்ற நகரத்தினருக்கு வழங்கிய உரையில் கூறினார்.

இத்தாலியிலும், இன்னும் உலகின் பிற இடங்களிலும் பணியாற்றிவரும் ஃபோகொலாரே (Focolare) என்ற இயக்கத்தின் தலைமையிடமான லோப்பியானோ நகருக்கு திருத்தந்தை மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணத்தின்போது, அந்நகர மக்களுக்கு இவ்வாறு உரை வழங்கினார்.

இறையடியாரான கியாரா லூபிக் அவர்களால் துவக்கப்பட்ட ஃபோகொலாரே இயக்கத்தைச் சேர்ந்த மூவர் எழுப்பிய கேள்விகளுக்கு விடை பகரும் வகையில் திருத்தந்தையின் உரை அமைந்திருந்தது.

இவ்வியக்கம் துவக்கப்பட்ட வேளையில் இருந்த ஆர்வம் சிறிது தணிந்துள்ள வேளையில், இன்றைய உறுப்பினர்கள் எவ்வாறு பணியாற்றுவது என்று எழுப்பப்பட்ட முதல் கேள்விக்குப் பதில் தந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில் கூறப்பட்டுள்ள, "உங்களிடம் இருக்கும் துணிவைக் கைவிட்டுவிடாதீர்கள். இதற்கு மிகுந்த கைம்மாறு உண்டு. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, அவர் வாக்களித்ததை நீங்கள் பெற்றுக்கொள்ள உங்களுக்கு மனஉறுதி தேவை" (எபி. 10:32-36) என்ற சொற்களை மேற்கோளாகக் கூறினார்.

50 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட ஃபோகொலாரே இயக்கத்தை, புதிய வழி நற்செய்தி அறிவிப்புப் பணியின் வழியில் எவ்வாறு நடத்திச் செல்ல முடியும் என்று எழுப்பப்பட்டக் கேள்விக்குப் பதில் அளித்தத் திருத்தந்தை, நமக்கு முன் உள்ள தொடுவானத்தைக் காண்பதற்கும், தேவைப்பட்டால், அதை, இன்னும் விரிவாக்கவும் உங்களை அழைக்கிறேன் என்று இவ்வியக்கத்தினரிடம் விண்ணப்பித்தார்.

இன்றைய உலகிற்கு மிகவும் தேவையானது சந்திக்கும் கலாச்சாரம் என்பதை வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை, ஏனைய கலாச்சாரங்களையும், மதங்களையும் சார்ந்தவரோடு நாம் மேற்கொள்ளும் சந்திப்புக்கள், திறந்த மனதுடன், நற்செய்தி விழுமியங்களின்படி நிகழவேண்டும் என்று எடுத்துரைத்தார்.

இறைவனின் தாயான மரியாவின் திருத்தலத்தில் நாம் சந்திக்கும் இவ்வேளையில், அன்னை மரியா, 'திருஅவையின் தாய்' என்பதை நாம் இன்னும் ஆழமாக உணரும் வண்ணம், இவ்வாண்டு, தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு அடுத்த நாள், நாம் இத்திருநாளை சிறப்பாகக் கொண்டாடவிருக்கிறோம் என்று கூறி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் பகிர்வை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.