2018-05-10 15:28:00

நோமதெல்ஃபியா, லோப்பியானோ - 22வது மேய்ப்புப்பணி பயணம்


மே.10,2018. மே 10 இவ்வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியின் மையப்பகுதியில் உள்ள டஸ்கனி (Tuscany) பகுதியில் அமைந்துள்ள நோமதெல்ஃபியா மற்றும் லோப்பியானோ ஆகிய இரு இடங்களில், தனது 22வது மேய்ப்புப்பணி பயணத்தை, மேற்கொண்டார்.

வியாழன் காலை, ஹெலிகாப்டரில் வத்திக்கானிலிருந்து கிளம்பிய திருத்தந்தை, முதலில், நோமதெல்ஃபியாவை அடைந்து, அங்கு நோமதெல்ஃபியா கிறிஸ்தவ குழுமத்தை உருவாக்கிய அருள்பணி சேனோ சால்த்தீனி அவர்களின் கல்லறையைப் பார்வையிட்டு, சில மணித்துளிகள் செபத்தில் ஈடுபட்டபின், அக்குழுமத்தைச் சேர்ந்த 4000த்திற்கும் அதிகமான விசுவாசிகளுக்கு உரை வழங்கினார்.

1948ம் ஆண்டு, அருள்பணி சேனோ அவர்களால் நிறுவப்பட்ட நோமதெல்ஃபியா குழுமத்தை, 1989ம் ஆண்டு, மே 21ம் தேதி, புனித திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் சந்தித்துள்ளார்.

நோமதெல்ஃபியாவில் தன் பயணத்தை நிறைவு செய்த திருத்தந்தை, அங்கிருந்து, டஸ்கனி பகுதியின் தலைநகரான பிளாரன்சுக்கு அருகே உள்ள லோப்பியானோ என்ற இடத்திற்குச் சென்றார்.

இறையடியார் கியாரா லூபிக் அவர்களால் 1943ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஃபோகொலாரே இயக்கத்தைச் சார்ந்த 6000த்திற்கும் அதிகமான உறுப்பினர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்து, அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் தன் உரையை வழங்கினார்.

லோப்பியானோவில் அமைந்துள்ள மரியா, இறைவனின் தாய் என்ற திருத்தலத்தை முதலில் பார்வையிட்டு செபித்த திருத்தந்தை, பின்னர் ஃபோகொலாரே இயக்கத்தினரைச் சந்தித்தார்.

194 நாடுகளில் பணியாற்றிவரும் ஃபோகொலாரே இயக்கத்தின் தலைமை இடம் என்று கருதப்படும் லோப்பியானோவிற்கு சென்ற முதல் திருத்தந்தை பிரான்சிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.