2018-05-10 15:20:00

நோமதெல்ஃபியாவில் திருத்தந்தை வழங்கிய உரை


மே.10,2018. நன்மைத்தனமும், அழகும் மிகுந்த நற்செய்தியை வாழ்வாக்கும் ஒரு முயற்சியாக, அருள்பணி சேனோ சால்த்தீனி (Zeno Saltini) அவர்களால் உருவாக்கப்பட்ட குழுமத்தை ஊக்குவிக்க நான் இங்கு வந்துள்ளேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை, நோமாதெல்ஃபியா (Nomadelfia) என்ற நகர மக்களைச் சந்தித்தபோது கூறினார்.

மே 10ம் தேதி, இவ்வியாழனன்று, இத்தாலியின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள நோமதெல்ஃபியா மற்றும் லோப்பியானோ ஆகிய இரு நகரங்களில் இயங்கிவரும் இரு இயக்கங்களைச் சார்ந்தவர்களை சந்திக்க, ஒரு மேய்ப்புப்பணி பயணத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்டார்.

முதல் நகரான நோமதெல்ஃபியாவில் கூடியிருந்த மக்களிடம் உரையாற்றுகையில், முதல் கிறிஸ்தவர்கள் வாழ்ந்த பகிர்வு வாழ்வை, அருள்பணி சேனோ அவர்கள் உருவாக்க எண்ணியதை திருத்தந்தை பாராட்டிப் பேசினார்.

"கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல" (லூக்கா 9:62) என்று இயேசு கூறிய சொற்கள், அருள்பணி சேனோ அவர்களை மிகவும் உந்தித்தள்ளிய சொற்கள் என்று எடுத்துரைத்தார்.

ஆதரவின்றி விடப்பட்ட குழந்தைகளைக் காப்பதற்காக அருள்பணி சேனோ அவர்களால் உருவாக்கப்பட்ட நோமாதெல்ஃபியா குழுமம், தற்போது "கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்" (மாற்கு 3:35) என்ற நற்செய்தி கூற்றின்படி, தன் குடும்பத்தை விரிவாக்கியுள்ளது என்று, திருத்தந்தை தன் மகிழ்வை வெளியிட்டார்.

கிறிஸ்து வழங்கிய உன்னத விழுமியங்களுக்கு எதிராக இயங்கிவரும் இவ்வுலகில், நற்செய்தியின் படிப்பினைகளால் தூண்டப்பட்டு, உறுதியான குடும்ப உறவுகளை வளர்த்துவரும் நோமதெல்ஃபியா குழுமத்திற்கு நன்றி சொல்வதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.