2018-05-09 15:26:00

சிரியா, உலகின் அமைதிக்காக செபமாலை செபியுங்கள்


மே,09,2018. இறைவனின் அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த மே மாதத்தில், ஒவ்வொரு நாளும் செபமாலை செபித்து, சிரியாவிலும், உலகமனைத்திலும் அமைதி நிலவுவதற்காக ஒப்புக்கொடுக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன்கிழமையன்று அழைப்பு விடுத்தார்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், இப்புதன் காலை பத்து மணியளவில் ஆரம்பித்த பொது மறைக்கல்வியுரையில், அரபு மொழி பேசும், சிறப்பாக, மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த மே மாதத்தில், ஒவ்வொரு நாளும் செபமாலை செபிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுமாறும், குறிப்பாக, அச்செபத்தை, சிரியாவிலும், உலகமனைத்திலும் அமைதி நிலவுவதற்காக ஒப்புக்கொடுக்குமாறும் திருப்பயணிகளிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், நாம் எந்த அளவுக்கு கிறிஸ்தவர்களாய் இருக்கின்றோமோ, அந்த அளவுக்கு,  கிறிஸ்துவை நம்மில் வாழ அனுமதிக்கின்றோம் என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டரில், இப்புதன்கிழமையன்று வெளியிடப்பட்டுள்ளன.

இன்னும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 11, இவ்வெள்ளியன்று, ருமேனிய நாட்டு பிரதமர், Viorica Dancila அவர்களையும், செக் மற்றும் சுலோவாக்கியாவின் ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவர், பேராயர் Rastislav அவர்களையும், வத்திக்கானில் சந்திப்பார் என, திருப்பீடம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, உலகின் ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையரைச் சந்திக்கும் அத் லிமினா எனப்படும் சந்திப்பில், மே 08, இச்செவ்வாய் மாலை ஆறு மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மியான்மார் நாட்டின் ஆயர்களைச் சந்தித்து கலந்துரையாடினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.